பொதுவாகப் புனைகதைகள் விதிவிலக்குகளைப் பற்றியதாக இருக்கும். ஒரு புனைகதாசிரியன் இப்படி விதிவிலக்கைப் பற்றி எழுதும்போது ஓர் இனத்தையோ, மதத்தினரையோ குறிப்பிட்டால், அந்த இனத்தவர் அல்லது மதத்தினர் அனைவரையும் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், அவனுடைய படைப்பில் அப்படி ஒரு நோக்கம் தெரியக்கூடுமாயின், அது கண்டனம் பெறத்தான் செய்யும். பத்திரிகைகளில் இது நேருவதற்கும், ஒரு நூலில் இந்தப் போக்கு தெரிவதற்கும் வித்தியாசம் உண்டு. பத்திரிகைகளின் வீச்சு அதிகமானதுடன், எதிர்வினையும் உடனே நேரும். நவீன தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்பொன்றிற்கு எழுந்த எதிர்ப்பு, நூல் எழுதி பல ஆண்டுகள் கடந்த பிறகு எழுந்தது. ஒரு தனி நூல் பொதுமக்களிடம் ஓரளவு பரவலாக அறியப்பட இவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்தியாவில் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சாதி உணர்வு வலுவாக இருப்பது, ஒரு சட்டம் இயற்றுவதாலும், அறிக்கைகளாலும், மேடைப் பேச்சுகளாலும் அதை ஒழித்துவிட முடியாது என்பதைத்தான் காட்டுகிறது. வட இந்தியாவில் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் குடும்பத்தினராலேயே படுகொலை செய்யப்படுவது, நிஜ வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் சட்டம், மதச்சார்பின்மை பற்றிப் வண்டி வண்டியாகப் பேசி எழுதுபவர்களுக்கு எதார்த்தம் சிறிதும் புரியவில்லை என்ற உண்மையையே இது காட்டுகிறது.
தென்னிந்தியாவில் சிவவாக்கியர் தொடங்கி, பல நூற்றாண்டுகளாக ஒரு சிறுபான்மைச் சமூகம் எப்படியெல்லாம் இழிவுபடுத்தப்படுகிறது என்பதை, அந்தச் சமூகத்தினர் அதைத் தம் தலைவிதியாக நினைத்துத்தான் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு அரசியல் சாசனத்தில் எந்தச் சலுகையும் கிடையாது. இவர்களைத் தவிர, இதர சமூகத்தினருக்குப் போரிடும் மரபு ஏதாவது ஒரு காலத்திலாவது இருந்திருக்கிறது. உடனே நம் மனத்தில் வரக்கூடியது முதுகுளத்தூர் கலவரங்கள்தான்.
விதிவிலக்குகள் எல்லாக் காலத்திலும் நேர்ந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் தேசப் பிரிவினையின்போது, அபகரிக்கப்பட்ட பெண்ணினத்தை இந்தியர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். நடைமுறையில் இது சாத்தியப்படவில்லை. ஆயிரக்கணக்கான பெண்கள் மனநிலை சீரழிந்து, காட்டிலும் பாலைவனத்திலும் குளிரிலும் செத்துச் சத்தையாகக் கிடந்தார்கள். மகா அக்பர் என்று கொண்டாடப்படும் அரசனின் படையெடுப்பால், ஜோத்பூரில் 16,000 பெண்கள் தீக்குளித்தார்கள். இதே அக்பருக்குப் பல ராஜபுத்திர அரசர்கள் அமைதியை வேண்டி, தம் அரண்மனைப் பெண்களை மணம் முடித்தார்கள். ஆறு முக்கியமான மொகலாய அரசர்களில் நால்வர் இந்தப் பெண்களுக்குப் பிறந்தவர்கள்.
நேர்ந்தது நேர்ந்துவிட்டது. இதற்காக ஒரு நல்ல எழுத்தாளர் தன் புத்தகங்களை எல்லாம் எரித்துவிடுவேன், அந்த எழுத்தாளர் செத்துவிட்டான் என்று அறிவிப்பது மிகையான எதிர்வினை. நாடகத்தன்மை கொண்டது. யதார்த்தம் நாடகங்களைப் போன்றது அல்ல. எதார்த்தம் முடிவே இல்லாதது. அழிவற்றது.
— இந்தியா டுடே, 28 ஜனவரி 2015
