கட்டுரையின் தலைப்பினை, ‘பைந்தமிழில் எழுதுதல்’ என வைத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். உடனடியாக ஒரு புலவர் தோரணை வந்து சேர்ந்திருக்கும். நானும் அப்படியெல்லாம்தான் எழுதி தமிழையும் அதுகூறு நல்லுலகையும் நெறிப்படுத்த நினைக்கிறேன். ஆனால், இப்போது பயந்த தமிழில் எழுதுவதே ‘உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ளதுக்கும் தீங்கிழைக்காததாக’ அமையும் என்னும் தீர்மானத்துக்கு வரவேண்டியதாக இருக்கிறது. நிலைமை; சூழ்நிலைமை.
அடுத்தடுத்த மூன்று விவகாரங்கள் என்னை இந்த முடிவினை நோக்கி உந்துகின்றன. பெருமாள்முருகன், புலியூர் முருகேசன் ஆகிய எழுத்தாளர்கள் மிரட்டப்பட்ட விரட்டப்பட்ட விதங்களும் பெண்கள் தினத்தை ஒட்டி ஒலிஒளியாக வெளியாக இருந்த பெண்கள் உரையாடலை தொலைக்காட்சி நிகழ்வில் வரவிடாமற் பலர் செய்ததோடு மட்டுமல்லாது தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் ரொம்பவே யோசிக்கவைக்கிறது. இந்நிகழ்ச்சிகளை (சம்பவங்கள் என எழுதவேண்டும்) ஒட்டி, எனக்கு நேர்ந்தவையும் நான் உணர்ந்தவையுமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கி.பி. இரண்டாயிரத்தின் அந்தியில் எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பு ‘கன்னிவாடி’ வெளியான மிதப்பில் நான் இருந்துகொண்டிருந்த காலத்தில் ஓசூரில் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தேன். அவர் புத்தகத்தை படித்துமுடித்துவிட்டிருந்தார். முதல் விமர்சனமே கதைகளைப் பற்றியதல்லாமல் தலைப்பைப் பற்றியதாக அவரிடமிருந்து வந்தது.
“கன்னிவாடி. ம்... கன்னிவாடி, திருச்செங்கோடு... ஆதிக்க சாதிக் காரங்களாலதாண்டா ஊர்ப் பேரைப் பெருமையாப் போட்டுப் புத்தகம் போட முடியும்.”
அதில் தொனித்த உட்கிடக்கை மனதில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதால் ஒப்புக்கொண்டேன். ஊர்ப்பெயரில் வெளிவந்த நூல்களைப் பற்றி யோசித்தேன். நீல. பத்மநாபனின், ‘பள்ளிகொண்டபுர’த்தைக் கணக்கிலாக்கலாமா எனத் தெரியவில்லை. ஆனால் அருகாமை ஆசாமிகளின் கதைகளை எழுதிவிட்டார் என அவர் அல்லலுக்கு ஆட்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். கவிதைத்தொகுப்புகளில் ‘எட்டயபுரம்’ வந்திருந்தாலும் கலாப்ரியா அந்த ஊரைச் சேர்ந்தவரல்ல. ராஜுமுருகன் தனது கவிதைத் தொகுதியை ‘அபிவிருத்தீஸ்வரம்’ என்ற தனது ஊர்ப்பெயரில் வெளியிட்டிருந்தான். அப்படியொரு ஊர்ப்பெயர் கிடைத்திருந்தால் நான் அதே பெயரில் கவிதை, நாவல் எல்லாம் கொணர்ந்திருப்பேன். கிருத்திகா எழுதிய ‘வாசவேஸ்வரம்’ கற்பனை ஊரா அல்லது அது நிஜமாகவே இருக்கிறதா என எனக்கு இன்றளவும் தெரியாது. இன்னும் சில ஊர்கள் இருக்கலாம். ஆனால் பேரரசு படம் எடுப்பது மாதிரி ஊர்ப்பெயரைத்தான் வைக்கவேண்டும் என யாரும் இலக்கியத்தில் ‘கங்கணம்’ கட்டிக்கொண்டு செயல்படவில்லை என்பதுமட்டும் புரிகிறது. தலைப்பினை விடுங்கள். ஆதவன் தீட்சண்யா அடுத்து என்னிடம் ‘கடிதோச்சி மெல்ல’ச் சொன்னது, கதையின் இடையில் வந்த ‘சண்டாளன்’ என்னும் வார்த்தை பற்றி.
சண்டாளன் என்பது பட்டியல் வகுப்பில் உள்ள ஜாதி என்றும் அதை நான் பயன்படுத்திய தொனியில் இனிமேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அடுத்து இதுகாறுமான பதினைந்து வருடங்களில் எனது கதைகளில் சண்டாளர்களே கிடையாது. ஒழிந்தார்கள் சண்டாளர்கள்.
‘சண்டாளா!’ என்னும் அந்த வார்த்தையை நான் எனது அப்பாவழிப் பாட்டியிடம் இருந்து பெற்றேன். எங்கள் குடும்பத்து ஆண்கள் நஷ்டமேற்படுத்துவதை ஜீவித தர்மமாகக் கொண்டு வாழ்கிறவர்கள். கை நஷ்டப்பட்டுக்கொண்டு வந்து, கையறுநிலையில் யாரும் நிற்கும்போதெல்லாம் கிழவி கண்ணீர் மல்க விளிப்பாள், “அட சண்டாளா!”
தமிழின் பெரும்பான்மை மனதுக்குத் தெரிந்த சண்டாளர்கள் பி.எஸ். வீரப்பா காலத்தைச் சேர்ந்தவர்கள். ‘பெண்டாளத் துணிந்த சண்டாளா!’ என்பது அத்தகையோரை அல்லது அத்தகாதோரினை விளிக்கும் எதுகை வாக்கியம். சண்டாளர்களில் பி.யூ.சின்னப்பாவின் படம் ஒன்றில் வரும் டி.எஸ். பாலையாவுக்கு நிகர்த்தவர்கள் யாருமில்லை. அவர் அப்படியென்ன செய்தார் என்பது சஸ்பென்ஸ். உறங்கிக் கிடந்த சண்டாளர்களை தனது செல்ல வசவுகள் மூலம் மீண்டும் வடிவேலு தமிழ்த்திரையில் எழுப்பினார். ‘சண்டாளீ என்னை ஆக்கிப்புட்டியே சுண்டெலியா’ எனப் பாடும்போது சண்டாளத்துக்கு ஒரு மோக வதனம் வந்துவிட்டது. இன்றைய பிசாசிய அழகியலில் கிராதகர்கள், ராட்சதர்கள், கிங்கரர்கள் அனைவரும் போற்றுதற்குரியவர்கள். (அழகிய ராட்சசியே, காதல் பிசாசே, கில்லியான கிராதகியே என ஆண் விளித்தால், பெண்ணோ, கிங்கரா என்னைத் தின்னுறா என்று சொல்லுவாள்.)
ஒரு வார்த்தைக்கே இத்தனை பிரச்சினையும் வரலாறும் பாருங்கள். ஆகவே, இந்தக் கதையாடல் சண்டாளர்களைக் குறித்ததல்ல.
மாட்டிக்கொள்ளாமல் எழுதுவது பற்றிய சில குறிப்புகள் - தன் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவை. அவ்வளவே.
எனது பிரசுரமான மூன்றாவதோ அல்லது நான்காவதோ கதையில் என்னுடைய பள்ளித்தோழி ஒருவரின் பெயரைப் பயன்படுத்தியிருந்தேன். (தோழி என்ன தோழி? பள்ளி நாட்களில் ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை. பின்னும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடியதோடு சரி. அவரது சமஸ்கிருதப் பெயரின் அர்த்தம் ‘நேசிக்கத் தகுந்தவர்’ என்பதாகும். இந்தத் தகவலின் ஈர்ப்பு அவரது பெயரைப் பயன்படுத்தத் தூண்டியது.)
கதை வெளி வந்த இதழ் வழக்கமாக அவர்களது ஊராட்சி ஒன்றிய நகரத்தில் ஐந்து விற்கும். அந்த மாதம் 14 புத்தகங்கள் விற்றதாகப் பின்னாளில் தகவல் அறிந்தேன். அதை விடவும் முக்கியம், ஒரு பக்கத்து ஊர் கிரிகெட் மேட்சின்போது ஒருவர் என்னை நெருங்கி, ‘அந்தப் பெண்ணின் மச்சான் உங்களை விசாரித்துக்கொண்டிருக்கிறார்’ என்ற தகவலைச் சொன்னார். டெம்போ எடுத்துக்கொண்டு எங்கள் ஊருக்கு என்னைச் சிலபேர் தேடிவரும் காட்சியை அடிக்கடி மனக்கண்ணால் கண்டு கிலிகொண்டிருந்தேன் சிலநாட்கள். அப்படி நடக்கவில்லை. எழுத்தாளர்கள் அடிபடுவதற்கு சாதி, இனம், மதம், நாடு என்பதுபோன்ற பெரிய அலகுகள் வேண்டியதில்லை. தம் சொந்த முயற்சியிலேயே பெட்டிக்கடைக் காரர்களிடம் கூட அடி வாங்கிவிடுவார்கள்.
ஒருமுறை ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு, எங்கள் ஊருக்கு ஸ்கூலுக்கு வரும் பெண்ணின் பெயர் வைக்க முடிவு செய்தேன். அவளது அழகு என்னைக் கவர்வதற்கு கூடுதல் காரணம், அவளது பெயரை முன்வைத்து சுஜாதா அழகான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். உதயத்தின் திசையிலிருந்து பேருந்து ஏறிவரும் அவளது பெயரினை எனது நாயகிக்குச் சூட்டினேன். அடுத்து, அவளுக்கு ஓர் ஊரைக் கற்பிக்கவேண்டும். எனக்கு சுற்றுவட்டாரத்தில் எழுபது ஊர்களின் பெயர்கள் அத்துபடி. அதன்படி அவளுக்கு ஓர் ஊரின் பேரினைச் சூடினேன். கதையை அனுப்பிவிட்டு மலருக்குக் கேட்ட கதையாகையால் பிரசுர உத்தரவாதம் உண்டு. அந்தப் பெண் நிஜமாக எந்த ஊர் என்று தெரிந்துகொள்கிற ஆவல் மிகுந்துவிட்டது. விசாரித்துத் தெரிந்துகொண்டேன். நான் எந்த ஊர் என்று அம்மணியைக் கதையில் எழுதினேனோ அதே ஊர்க்காரி அவர்.
ஆக, இளம் எழுத்தாளர்கள் மனதில் வைக்கவேண்டியது சுஜாதாவின் தலைப்புகளையோ மற்ற ஆகிருதிகளால் புனையப்பட்ட பெயர்கள், தெருக்கள் மற்றும் உருக்களையோ அல்ல... ‘எதார்த்தம் என்பது பேர் வைப்பதில் இல்லை’ என்கிற சுஜாதாவின் வாக்கியத்தை முக்கியம் என்றே கருதுகிறேன் இப்போது.
இதுபோன்ற சம்பவங்கள் எதார்த்தமான சிறுசலனங்களுடன் தப்பித்துவிட்ட விபத்துக்களாக என்னளவில் முடிந்துவிட்டன.
பெருமாள்முருகன் அவர்களுடைய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு நிகழ்ந்தனவற்றை நாடறியும். பூடகமாக ‘உள்ளே’ நடந்தனவற்றை அவரவர் கற்பனா சக்திக்குத் தகுந்தவாறு நினைந்து மனம்கருதலாம். திருச்செங்கோடு என்பது மாதிரியான உலகத்தின் மைய நிலை என்பது கிடையவே கிடையாதுதானே. ஆகவேதான் அவரவர் மனங்கொள்ளத்தக்கனவும் கருதத்தக்கனவுமே கற்பிதங்கள். நான் என்னளவில், மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி என ஒரே தலைப்பில் இத்தனை நாவல்கள் எழுதுகிறாரே என வியந்துகொண்டிருந்த காலகட்டமான இதில், தமிழ்க் கூறுலகில் அதுகாறும் யாரும் அதுவரை வெளியிடாத அறிவித்தலை அவர் வெளியிட்டார். இனிப் புனைவுகள் எழுதப்போவதில்லை. அவர் மீண்டும் எழுதவேண்டும் என்னும் கோரிக்கை வைக்கும் இடத்தில் நான் இல்லை. ஒரு கோடி ரூபாய் காசோலை கொடுக்கும் ‘வக்கு’ இருந்தால் அவரிடம் நான் அப்படிச் சொல்லலாம்.
பெருமாள்முருகனின் அறிவித்த(!) நிலைப்பாட்டினை அடுத்து பல நண்பர்கள், இலக்கியமும் அறிந்த நண்பர்களுடன் உரையாடினேன். இது சம்பந்தமான தனி உரையாடல்கள் எல்லாம் காதலாகிக் கசிந்து மல்கும் தருணங்களே.
அப்படியான தருணம் ஒன்றில் வா.மு.கோமு சொன்னார்.
“ஆமாங்க அவங்க சொன்னாக் கேட்டுக்கவேண்டியதுதான். அப்படி யாராவது எங்கிட்ட வந்து சொன்னாங்கன்னா, ‘சரிங்கண்ணா நாப்பது செம்பிலிக் குட்டி வாங்கிக் குடுங்க. மேச்சுப் பொழச்சுக்கறேன்’னு சொல்லலாம்னு இருக்கேன்” என்றார் அவர். (செம்பிலிக் குட்டி என்பது செம்மறி ஆட்டின் குட்டிகள் என்பது கொங்கு வட்டாரத்துக்கு வெளியே உள்ள வாசகர்களுக்கான குறிப்பு.)
உழவு மண்ணில் என்னைவிட ஊறியும் நிலம் நனைத்தும் வாழ்ந்திருந்த எழுத்தாளனிடம் நான் போனில் சொன்னேன்.
“‘சதாசிவம் ஈசி சேரில் அமர்ந்திருந்தார்.’ என்று அதை எழுத ஆரம்பித்துவிட வேண்டியதுதானா?” என்று.
தரையின் உழைப்புப் பாடும் தறியின் ஊடுபாவும் அறிந்த கவிஞனான நண்பன் சொன்னார். “இன்னி எழுதறது சுலபம். நமது ஆதிக்க சாதி நாட்டாமைகள் இனிமேல், பறவைகள் கூடு கட்டியிருந்தால் மரத்தை வெட்டமாட்டார்கள். விளைச்சல் முடிந்து வீட்டுக்கு மூட்டை சுமந்து வரும் கூலிக்காரர்களிடம், ‘நம்ம வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் வச்சிட்டு மிச்சத்தையெல்லாம் நீங்க பங்கி எடுத்துக்கங்கப்பா’ என்று சொல்லி விடுவார்கள். இப்படி எழுதிவிட்டால் நாமதான் பெரிய எழுத்தாளர். இப்பவே எழுத ஆரம்பிங்க...”
மொத்தக் குழப்பத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடை என்னவென்றால், எழுதறதுன்னா என்ன என்னும் இடத்துக்கே நமக்கு விடை இல்லை.
புலியூர் முருகேசனின் நூல் வெளியீட்டின் போது வா.மு.கோமு, பல்லடம் ராசு, கீரனூர் ஜாகீர் ராஜா மற்றும் பலருடன் நானும் பங்குகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
நான் அதுவரையில் முருகேசனின், ‘ஐசிஐசிஐ வங்கிக்கு வந்து திரும்புபவள்’ என்ற ‘உயிர் எழுத்து’ மாத இதழில் வந்த கதையை மட்டும் படித்திருந்தேன். அந்தக் கதைநாயகியை நானும் பார்த்திருக்கக் கூடும் என்னும் நம்பிக்கை எனக்கிருந்தது. கரூர் பேருந்து நிலையத்தைச் சுற்றிக் கதை நடக்கிறது. எனது பண்டைய காலத்தில், கரூரில் சேவலுங்கூவாத காலையில், ‘பழனி தாராவ்ரம் பொள்ளாச்சி உடுமல... தாராவர தாராவ்ரே...’ என்று கூவுகிற - 4.05 a.m. to 4.22 a.m. - ஆறுமாத காலங்கள் வாய்த்திருந்தன. தொழிற்பழகுங் கண்டக்டர். நான் ஆள் தேடிக் கூவிய காலங்கள் பிரம்ம முகூர்த்தமாக இருக்காது என்றே நம்புகிறேன்.
புலியூர் முருகேசனின் நூல் வெளியீட்டு அரங்குக்குள் நுழைவதற்கு சற்று முன் எனக்கு ஊரிலிருந்து ஓர் அலைப்பேசி. “என்னை ஏண்டா எழுதுனே... உன்னைப்பத்தி எழுது, உங்கப்பாவைப் பத்தி எழுது” எனப் பழைய கதை குறித்த மிரட்டல் அது.
பேசிய நண்பனுக்கு வாசிப்பது முழுநேரத் தொழிலல்ல. நல்ல வாசிப்பாளராக இருந்திருப்பின், நான் என்னைத் தவிர எதைப்பற்றியுமே எழுதத் தெரியாதவன் என்னும் உண்மையைப் புரிந்திருப்பார். அவரது உரையாடலுக்கு இடையில், நான் மூன்று புள்ளி வைக்கிறேன் என்றால் அது எழுதத் தகாத வார்த்தை அல்ல. அவற்றை எழுதினால் பொது அமைதிக்குக் குந்தகம் விளைந்துவிடும் என்பதே.
எப்படியோ பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கத் தெரிந்தும் தெரியாமலும் தெரிந்திருந்த முருகேசனுக்கு ‘புலியூர் முருகேசன்’ என்றே அட்டையில் போட முடிந்தது எப்படி? - என்பது இப்போதைய யோசனை. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்வேன். அவரது எழுத்தின் மீது கோபங் கொண்டவர்கள், “ஸ்வர்ணலாதாவைப் பற்றி இவ்வளவு அருமையாக எழுதுகிற நீங்கள்... இப்படியெல்லாம் எழுதலாமா நண்பரே!” என்று மட்டும் கேட்டிருந்தால் அப்போதே புத்தக விற்பனையை நிறுத்தி அடுத்த, திருத்தப்பட்ட பதிப்பைப் பற்றி யோசித்திருப்பார்.
கல்வியில்லாத சமூகம் அடிதடி அளவுக்கு இறங்கிவிட்டது. எழுத்தாளர அடிச்சிட்டாங்களே? என்று பிரலாபித்தால் “டெய்லர அடிச்சாப் பரவாயில்லயா? வீதி கூட்டறவங்கள அடிச்சாப் பரவாயில்லயா?” என்கிற பலகேள்விகள் வரும். வரவேண்டும். இதை எனக்கு மனதில் பதியுமாறு எடுத்துரைத்தவர் நாஞ்சில் நாடன்.
முருகேசனின் புத்தகத்தலைப்பாக ‘பாலச் சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு’ என்பதைக் கண்டபோது ‘இவரு எதுக்கு இத்தனை உணர்ச்சிவசப்படறாரு?’ என எனக்குத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை மறு ஆக்கம் செய்யச் சொன்னால், ‘எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதா?’ என வைத்துவிடுவேன். முருகேசனுக்கு ஆதரவாக ஏதும் பேசப்போனால் கரூரில் சில நண்பர்களை இழக்கவேண்டிவரும். இழந்து கொண்டிருக்கிறேன். கரூரில் - கருவூரில் நான் பெறுவதற்கு இன்னும் உளவா என்பதைக் காலமே சொல்லவேண்டும். காலத்தின் குரல் கேட்க நான் காதுடன் உயிருடனும் காத்துக் கிடக்கவேண்டும்.
பெருமாள்முருகனின் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’ என்னும் பேருழைப்பின் தொகுப்பு பற்றி இப்போது யோசிக்கிறேன். அந்தத் தொகுப்பினை கூடுதற் சேர்க்கையுடன் மீண்டும் கொண்டுவருவதென்றால் அதன் நிமித்தமான பொருளாதார ஆதரவு எப்படி இருக்கும் என்று யோசித்தால் வியத்தகு கற்பனைக் காட்சிகள் மனதில் எழுகின்றன.
அவர் மாப்புக் கோரியதன் பின் விளைவுகளை யோசித்தால் என்ன தோன்றுகிறது என்றால்,
கருத்தியல் ஒன்றின் மீதான எதிர்வினை, எதிர்வினையின் சாதகப் போக்கு அடுத்தடுத்து எதிர்க்கருத்தாளர்களுக்கு ஊக்கம் தரும். இதனை ‘புதிய தலைமுறை’த் தொலைக்காட்சி ஊடகத்தின் மீதான தாக்குதல் நிரூபித்திருக்கிறது.
தாலியைப் பற்றிய உரையாடல் தடைபட்டதாக அறிகிறேன். 100 விழுக்காடு பெண்கள் சந்திப்பாக இருந்திருக்கக் கூடும் அது. ஆண்களுக்கே சுதந்திரமில்லாத நாட்டில் நிகழ்ச்சி உருவாக்கும் நபர்களுக்கும் அவ்வளவே இயலும். அதைக்கூட ஒளிபரப்ப விடமாட்டேனென்கிறார்கள் பாருங்கள். தாலியைப் பற்றி சின்னத்தம்பியை விட எனக்குக் கூடுதலாக இரண்டு விஷயங்கள் தெரியும்.
ஒன்று, தாலியை அடகு வைக்கவோ விற்கவோ முடியும். (தாலிய அடகு வச்சு மகனை/ளைப் படிக்கவச்சேன் என்பது மாதிரியான சந்தர்ப்பங்கள் பிற்கால மமதை மற்றும் அவஸ்தைகளுக்குக் காரணமாக அமைய முடியும்.) இதற்கெல்லாம் தாலி, தங்கத்தில் அமையவேண்டும் என்பது அடிப்படை குறிப்பு.
இரண்டாவது, தாலியைக் கழற்றி கணவனின் நெஞ்சில் எறிந்தால் கணவர்கள் மனநல மருத்துவமனையை நாட வேண்டிய அவசியமில்லை. அவ்வளவுதான்.
இனி நாம் பேசவேண்டியது எப்படியென்றால், நான்கு ஆழாக்கு அரிசிக்கு ஒரு ஆழாக்கு உளுந்து. இது இட்லி மாவு என அரைத்தபின் அழைக்கப்படும். ஊறப்போடுதல் அவரவர் கைப்பக்குவம்.
இதனன்னியில், ‘உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி வெந்தயம் போடுவதா அல்லது இரண்டு தேக்கரண்டியா?’ என்பதைத்தான் தலைப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். எடுத்துச் சொல்லவேண்டும். அப்புறம் வெந்தயத்துக்கும் கோதுமைக்கும் என்ன வித்யாசம்? வெந்தயத்துக்கும் தங்கத்துக்கும் கோதுமைக்கும் என்னே நிற ஒற்றுமை!?!?. வீட்டின் மூலைச் சமையறையில் வார்க்கும் தோசைகளை கோதுமைத் தோசைகளாக மாற்றிவிட்டால், நாம் பேசவேண்டியவற்றைப் பேசிவிடலாம். பேசவாவது செய்யலாம்.
— அம்ருதா, ஜூன் 2015
