எழுதுகோலின் மரணம்

ஆசிரியர்: கவிதா முரளிதரன்தேதி: 2026-09-25மூலம்: இந்தியா டுடே (2015-01-28)
எழுதுகோலின் மரணம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை எழுதப்படாத துயர்மிகு வரிகளை ஜனவரி 13ஆம் தேதி இரவில் எழுதினார் பெருமாள் முருகன். அன்றுதான் எழுத்தாளராக தனது மரண சாசனத்தை அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டார். அவருடைய எல்லா படைப்புகளையும் பின்வாங்குவதாகவும் இனி எப்போதும் எழுதப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். நமது காலத்தில் படைப்பூக்கம் கொண்ட ஒரு எழுத்தாளர் தனது பேனாவை சவக்குழிக்குள் இறக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தது, எழுத விஷயமில்லாமல் இல்லை. சொல்லப் போனால் இப்போதுதான் மிகுந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இப்போது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மாதொருபாகன் நாவலின் தொடர்ச்சியாக இரண்டு நாவல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

டிசம்பர் மாதத்திலேயே இந்த பிரச்சனை தொடங்கிவிட்டபோதும் அது இவ்வளவு பெரிதாக மாறும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு வாட்ஸ்அப் செய்தியில்தான் பெருமாள்முருகனுக்கு எதிரான போராட்டம் உருவானது. “திருச்செங்கோடு பெண்களை இழிவாக சித்திரித்தவருக்கு எதிராக போராட உணர்வுள்ள அனைத்து இந்துக்களுக்கும்” அழைப்பு விடுத்தது அந்த செய்தி. போராடுபவர்களோ ஒருவர்கூட பெண் இல்லை என்பது நகை முரண். சொல்லப்போனால் இந்த பிரச்சனை வெடித்த பிறகு பெண்ணியவாதிகளிடத்திலும் பெண் எழுத்தாளர்கள் மத்தியிலும் பெருமாள் முருகனுக்கு ஆதரவு கூடியிருக்கிறது. “மாதொருபாகன் ஒரு பெண்ணிய பிரதி. குழந்தையில்லாத ஒரு பெண்ணின் வலியை, அவருளுடைய தனித்துவம் மறுக்கப்படுவதை, இருத்தலியலின் சிக்கலைப் பேசுகிறது. அதில் வரும் இரண்டு பக்கங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பிரச்சனை செய்வது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்கிறார் அரசியல்வாதியும் எழுத்தாளருமான ஜோதிமணி.

“குழந்தை இல்லாத தம்பதியை, குறிப்பாய் பெண்ணை தன் கொடு நாக்கால் இச்சமூகம் கொட்டிக்கொண்டே இருப்பதை மக்களின் எளிய மொழியில் இவ்வளவு அற்புதமாகச் சொன்னதற்காக, பெருமாள்முருகன் அவர்களுக்குத் தமிழகப் பெண்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்” என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் கோ.மஞ்சுளா.

இந்த நாவலின் பொருட்டுதான் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளனுக்கு மரண தண்டனை விதித்திருக்கின்றன சில சக்திகள். ஜனவரி 7ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு எதிர்த்தரப்பினர் வராத நிலையில் பெருமாள் முருகனை ஊரைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது காவல்துறை. பிறகு ஜனவரி 9ஆம் தேதி கடையடைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தனது படைப்பை பின்வாங்குவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பெருமாள் முருகன். “பெருமாள் முருகன் ஏற்கனவே வெளியிட்ட இரண்டு அறிக்கைகளை வைத்துக்கொண்டு நான் ஒப்பந்தத்தை தயார் செய்தேன். அதில் உண்மையான வருத்தம் என்று எழுதியிருந்ததை அந்த டிஆர்ஓ நிபந்தனை அற்ற மன்னிப்பு என்று மாற்றச் சொன்னார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது மனைவியுடன் பேசி முடிவெடுக்க முடிவு செய்தோம். ஆனால் மீண்டும் எங்களை வரவழைத்த டிஆர்ஓ முருகன் ஏற்கனவே சொல்லியிருந்தபடி நாவலின் அடுத்த பதிப்பில் இடத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் விற்கப்படாத நாவலின் பிரதிகளைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் சொன்னார். அது கடையடைப்பு வேண்டாம் என்பதற்காக பெருமாள் முருகன் சொன்ன உடன்படிக்கை; ஆனால் கடையடைப்பு நடந்துவிட்டது என்று சொன்னபோது அதை டிஆர்ஓ ஏற்கவில்லை. உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்த பெருமாள் முருகன் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், செய்யுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்” என்கிறார் பெருமாள்முருகனின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன். இப்படி ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தை நடந்தது பற்றி மாவட்ட நிர்வாகம் வாய் திறக்க மறுக்கிறது.

ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி, பாஜக போன்றவை தங்களுக்கும் இந்தப் போராட்டங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்ட நிலையில் கடையடைப்புக்கு பிறகு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி களமிறங்கியது. “அவரது எல்லா படைப்புகளிலும் பெண்களை மோசமாகச் சித்திரித்திருக்கிறார். அவற்றைத் தடை செய்ய வேண்டும்” என்றார் அதன் பொதுச் செயலர் கொங்கு ஈஸ்வரன்.

ஒரு எழுத்தாளரை தற்கொலைக்குத் தூண்ட சாதிய சக்திகளும் மதவாத சக்திகளும் கை கோர்ப்பது இது அநேகமாக முதல் முறை.

பேச்சுவார்த்தைக்கு அடுத்த நாள் எழுத்தாளராக தனது மரணத்தை அறிவித்துக்கொண்டார் பெருமாள் முருகன். அந்த அறிவிப்புக்குப் பிறகு கருத்துரிமைக்கான குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன என்றாலும் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளர் அவரது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.

“ஒரு எழுத்தாளர் என்ன எழுதியிருந்தாலும் அவருடைய எழுதும் கையை அறுக்கும்போது, ஒரு சமூகமோ குழுவோ நாடோ, தனது ஒட்டுமொத்த அறிவிலும் தீவைத்துக் கொள்கிறது. தன்னைத்தானே அதிர்ச்சிக்குள்ளாக்கி, தனது தேக்கநிலைக்குத் தானே காரணமாகி, தனது பொருத்தமின்மையை நோக்கி நகர்கிறது. பெருமாள் முருகனுக்கு நேர்ந்தது துயரமானது மட்டுமல்ல, பரிதாபத்துக்குரியதும்கூட.” — அருந்ததி ராய்

— இந்தியா டுடே, 28 ஜனவரி 2015

நன்றி:

ஆசிரியர்:கவிதா முரளிதரன்

மூலம்: இந்தியா டுடே (2015-01-28)

ஆசிரியர் குறிப்பு: கவிதா முரளிதரன், இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் இயங்கிவரும் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சமூகப் பிரச்சினைகள், அரசியல், பாலின சமத்துவம், கலை, இலக்கியம் குறித்துத் தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தி இந்து, இந்தியா டுடே, த வயர், ஃப்ரண்ட்லைன், பிபிசி தமிழ் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் பணியாற்றியும் எழுதியும் வருகிறார். குறிப்பிடத்தக்க பல நூல்களையும் புனைகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் மாதொருபாகன் நாவல் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், சமூக-அரசியல் எதிர்வினைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை இங்குப் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மாதொருபாகன், ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி ஆகிய மூன்று நாவல்களையும் முன்வைத்து காளி–பொன்னாவின் பிரியம், குழந்தையின்மை, கண்டிஷனல் தொடர்ச்சி மற்றும் மனித மனதின் உளவியல் முரண்களை விரிவாக ஆராய்கிறார் சி. சரவணகார்த்திகேயன்.

ஆசிரியர்: சி. சரவணகார்த்திகேயன்தேதி: 2026-10-09மூலம்: தமிழ் (இணைய இதழ்) (2015)
மாதொருபாகன் Trilogy: பிரியத்தின் துன்பியல்

பெருமாள்முருகன் சர்ச்சை, புலியூர் முருகேசன் மீதான தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளின் பின்னணியில், எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் 'பயந்த தமிழில் எழுதுதல்' என்னும் சமகால நெருக்கடியையும் தன் அனுபவங்களினூடாக அங்கதச் சுவையுடன் விவரிக்கிறார் க.சீ. சிவகுமார்.

ஆசிரியர்: க.சீ. சிவகுமார்தேதி: 2026-09-18மூலம்: அம்ருதா (2015-06-01)
பயந்த தமிழில் எழுதுதல்

ச. தமிழ்ச்செல்வன் 'மாதொருபாகன்' நாவலை முன்வைத்து குழந்தைப்பேறு சார்ந்த உளவியல் நெருக்கடி, சமூக நம்பிக்கைகள், வரலாற்றுப் பின்னணியிலான சடங்குகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேசுகிறார்.

ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்தேதி: 2026-09-10மூலம்: புதிய புத்தகம் பேசுது (2015-02-01)
வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்