கலையுரைத்த கற்பனையே நிலையெனக்
கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக...
- இராமலிங்க வள்ளலார் (திருவருட்பா - பாடல்: 3768)
‘மாதொருபாகன்’ நாவல் விவாதப் பொருளாவதற்குச் சில நாட்கள் முன்பாக பெருமாள்முருகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு (4 ஜனவரி 2015) நேர்காணல் அளித்திருந்தார். அதில் ‘நீங்கள் கல்லூரி ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள். இதில் எது உங்கள் அடையாளம்; எழுத்தாளரா இல்லை ஆசிரியரா?’ என்ற வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில் அளித்திருந்தார்: ‘எழுத்து என் ஜீவிதம்; ஆசிரியப் பணி என் ஜீவனம்.’
இந்த நேர்காணல் வெளியான ஒரு வாரத்துக்குள்ளாகவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்: ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்து விட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியிலும் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.’
இந்த இரண்டு வெளிப்பாடுகளுக்கு இடையில் நிகழ்ந்த சம்பவங்கள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன. எல்லாருக்கும் தெரிந்தவையாகவும், எல்லாரும் கருத்து சொல்லும் பொதுப் பிரச்சனையாகவும் ஆகியிருக்கின்றன. ஜீவனாகக் கருதிய எழுத்தைக் கைவிடும் முடிவுக்குப் பெருமாள்முருகனைக் கொண்டுசேர்த்த அச்சுறுத்தல் தனிப்பட்ட முறையில் அவருக்குச் செய்யப்பட்ட எச்சரிக்கை மட்டுமல்ல. எழுத்தைத் தீவிரமாகக் கருதும் அனைவருக்கும் விடப்பட்ட சவால். மனிதனின் கருத்து உரிமைக்குப் போடப்பட்ட விலங்கு. கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்வதற்குப் பதிலாக கருத்தை வெளியிட்டவனின் உயிரையும் இருப்பையும் காவுகேட்கும் நடவடிக்கை. தன் எழுத்தின் உண்மையைப் புரிந்துகொள்ளாத ஒரு சமூகத்தில் எழுதுவது பயனில்லை என்ற நிலைப்பாட்டில்தான் பெருமாள்முருகன் மனம் நொந்து தனது இலக்கிய மரணத்தை அறிவித்திருக்கிறார். உலக இலக்கிய வரலாற்றில் ஓர் எழுத்தாளன் மனம் நொந்து, தனது எழுத்தின் மரணத்தைத் தானே அறிவித்திருப்பது அநேகமாக இதுவே முதல்முறை. இதுவே கடைசி முறையானதாக முடிய வேண்டும் என்பதே இப்போது பெருமாள்முருகனையும் அவரது நாவலையும் முன்வைத்து நடைபெறும் விவாதங்களின் நோக்கம்; அவருக்கு அளிக்கப்படும் தார்மீக ஆதரவின் குறிக்கோள்; அவருக்காக உலகெங்கும் நடைபெறும் போராட்டங்களின் உந்து சக்தி.
பெருமாள்முருகன் எழுதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘மாதொரு பாகன்’ நாவலை மையமாக வைத்தே அவரது இருப்பும் வாழ்வும் அபாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து இன்று நான்கு பதிப்புகளை எட்டியிருக்கும் ஒரு நாவல் காலதாமதமாக விமர்சனத்துக்கு உள்ளாவது ஏன் என்ற கேள்வி அவ்வளவு ஒன்றும் பொருத்தமற்றதல்ல. அண்மையில் நடந்த அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இதைக் காண்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மத அடிப்படைவாத அமைப்பு நாட்டின் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நடைபெறும் ‘புனருத்தாரண நடவடிக்கை’களின் பகுதி இது என்று சொல்லக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன.
பன்முகக் கலாச்சாரமுள்ள நாட்டை ஒற்றைப் பரிமாணமுள்ளதாக்கும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. நாம் எந்த மொழியைப் பேச வேண்டும், நாம் என்ன உடை உடுத்த வேண்டும், நமது தேசிய நூலாக எதை ஏற்க வேண்டும், நாம் என்ன உணவை உண்ண வேண்டும், நாம் எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் இந்த அதிகார சக்திகள்தான் தீர்மானிக்கின்றன. நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பகுதிதான் ‘மாதொருபாகன்’ நாவலை முன்வைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்களில் வெளிப்படையாகச் செயல்படும் மதவாத சக்திகள் தமிழகத்தில் சாதியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றன. நீண்ட காலமாகத் திராவிட இயக்கங்களும் இடதுசாரி அமைப்புகளும் மதத் தீவிரவாதத்தை உள்ளே நுழைய விடாமல் எதிர்ப்பு காட்டிய தமிழகத்தில் சாதியத்தின் மூலம் ஊடுருவும் இந்துத்துவ தந்திரம் செயல்பட்டிருக்கிறது.
பெருமாள்முருகனின் நாவல் இந்து மதக் கடவுள்களையும் இந்துப் பெண்களையும் அவமதிக்கிறது என்றே முதலில் குற்றம் சாட்டப்பட்டது. இலக்கிய உலகின், கருத்துலகின் எதிர்ப்புக் காரணமாகவும் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்ட ‘பாவ ஒப்புதல்’ வன்மமானது என்று தேசிய அளவிலும் உலக அளவிலும் கண்டனத்துக்கு உள்ளானதன் காரணமாகவும் குற்றச்சாட்டு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களையும் அவர்களது ஒழுக்கத்தையும் அவதூறு செய்வதாக மாற்றப்பட்டது. இந்துத்துவ அமைப்புகள் மறைமுகமாக நின்று சாதியப் பிரச்சனையாக இதை மாற்றுவதில் வெற்றி பெற்றன. அந்த வெற்றியே பெருமாள்முருகனை மண்டியிடச் செய்தது. உண்மையில் மண்டியிட நேர்ந்தது அவரல்ல; படைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் எல்லா எழுத்தாளர்களும்தான். அதனாலேயே பூமியின் எல்லா மூலைகளிலிருந்தும் அவருக்கு ஆதரவான குரல்கள் எழுந்திருக்கின்றன.
2
‘மாதொருபாகன்’ நாவல் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது நாவலை மையமாக வைத்து விவாதங்கள் எழும்வரையான நான்கு ஆண்டுகளில் மூன்று பதிப்புகள் வந்திருக்கின்றன. எதிர்ப்பு ஏற்படும் வேளையில் நான்காவது பதிப்பும் வெளிவந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டு அனிருத்தன் வாசுதேவனின் ஆங்கில மொழியாக்கத்தை (One Part Woman) பென்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுக்கால இடைவெளியில் பலரும் இந்த நாவலை வாசித்திருப்பதற்கான வாய்ப்புகள் திறந்தே கிடந்தன. விவாதிக்கவும் விமர்சனம் எழுப்பவுமான சந்தர்ப்பங்களும் வெளிப்படையாகவே இருந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுக்காலம் கவனிப்பாரற்றுக் கடக்கப்பட்ட நாவலின் மையப் பொருளும் இப்போது விவாதப் பொருளாகச் சொல்லப்படும் ஊர்ப் பெயரும் சமுதாயச் சித்திரிப்பும் நாவலில் அப்படியேதானே இருந்தன?
அப்போதெல்லாம் ஏற்பட்டிராத இழிவும் மத நிந்தனையும் இப்போது எப்படி சர்ச்சைக்குக் காரணமாயின? இந்தக் கேள்விக்கு எதிர்ப்பாளர்களின் பதில் மௌனமே. இந்த மௌனத்தின் பின்னால் பெருந்திட்டம் இருந்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் இந்துத்துவப் பின்னணியுள்ள அரசு அமையாமலிருந்தால் இந்தப் பிரச்சனையே முளை விட்டிருக்காது என்பதைப் புரிந்துகொள்ள ‘அர்த்த சாஸ்திரம்’ பாராயணம் செய்துபெற்ற ஞானமொன்றும் தேவையில்லை. சமகால நாட்டு நடப்புகளைக் கவனித்திருந்தாலே போதும்.
ஓர் அதிகாரப் பரவலின் திட்டம் இது என்பது வெளிப்படை. அந்த அதிகாரப் பரவலுக்கு உதவும் சாதிய அமைப்புகளையும் தொழில் சாம்ராஜ்யங்களையும் அதிகாரத்துக்குக் காத்துக் கிடக்கும் உதிரி அமைப்புகளையும் ஒன்றிணைத்து நடத்தப்படும் பெரும் சதியின் கைவேலை இது. இதற்கு ஓர் எளிய எழுத்தாளன் பலியிடப்பட்டான் என்பது அவமானகரமானது. காலங்காலமாகப் பெருமை பெற்று நிலைநிற்கும் ஒரு மதமும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சாதியும் ஒரு எளியவனின் எழுத்துக்களால் சிதறுண்டு போகுமென்றால் அந்த மதத்தின் அடிப்படையையும் அந்த சாதிய அமைப்பின் கட்டுமானத்தையும் காலம் உலுக்கி வீழ்த்தும். அப்படியான வீழ்ச்சியின் அடையாளத்தையே இந்த வன்ம நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது. ஓர் எழுத்தாளனின் வாக்கு வெறும் சொல் அல்ல; அது அதிகாரத்தை எதிர்க்கும் ‘சரஸ்வதியின் சாபம்’ என்பதையும் பகிரங்கப்படுத்துகிறது. தாங்கள் அறிந்தேயிராத ஒரு எழுத்தாளனுக்கு ஆதரவாகவும் தாங்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லாத ஒரு படைப்புக்காகவும் உலகம் முழுவதும் இருந்து பாதுகாப்புக் கரங்கள் நீளுவது குறைந்த பொருளில் எழுத்தை, விரிவான பொருளில் மனிதத்துவத்தை அதிகாரம் தன்னிச்சையாகக் கையாள அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில்தான்.
‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்பாளர்கள் தங்களது மூடத்தனத்தால் தமிழ்ப் பண்பாட்டு உலகில் மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பெருமாள்முருகன் சந்திக்க நேர்ந்த எதிர்ப்பு அளவுக்கு இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளனும் எதிர்ப்பைச் சந்தித்ததில்லை. இவ்வளவு ஆதரவையும் பரிவையும் பெற்றதுமில்லை. ‘சீலைப் பேன் வாழ்க்கை’யைக் கட்டிக் காப்பாற்ற நினைக்கும் கூட்டம் அந்த வாழ்க்கையின் உண்மையை எடுத்துச் சொல்லும் படைப்பாளியிடம் வெகுண்டு அதிகாரத்தின் மூலம் அடக்கவே முயன்றிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் இதற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காகப் பல நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான உதாரணங்கள் பல. பண்பாட்டையும் மதத்தையும் அவதூறு செய்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட படைப்புகளும் இருக்கின்றன. ‘அம்மா வந்தாள்’ நாவல் பிராமணர்களை அவமதிக்கிறது என்பதனால் தி. ஜானகிராமன் பிரஷ்டம் செய்யப்பட்டார். ‘மைலாஞ்சி’ கவிதைத் தொகுப்பில் மத நம்பிக்கைக்கு எதிரான கவிதைகள் இருக்கின்றன என்ற புகாரின் பேரில் ஹெச்.ஜி. ரசூல் மதப் பாதுகாவலர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்துகிறது என்று ஜோ டி குரூஸ் சொந்த சமுதாயத்தாலேயே புறக்கணிக்கப்பட்டார். தனது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என்று தலைப்பிட்டதற்காக குட்டி ரேவதி கலாச்சாரப் போலீஸ்காரர்களால் தூற்றப்பட்டார். ஆட்சேபகரமான கவிதை எழுதியதாக லீனா மணிமேகலை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இராக்கைப் பற்றிக் கூட்டுக் கவிதை எழுதியதற்காக இடதுசாரிகளால் ஷங்கர்ராம சுப்ரமணியன் மன்னிப்புக் கடிதம் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டார். ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ கதையை எழுதிய சுந்தர ராமசாமி காமாலைக் கண் வாசிப்பால் அச்சுறுத்தப்பட்டார். ‘மாதொருபாகன்’ நாவலைப் பற்றிய சர்ச்சைகள் நடைபெறும் இதே வேளையில் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நாவலை எழுதிய துரை. குணா ஊர் விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எழுத்தின் மீதும் கருத்துகளின் மீதும் நாட்டாமை செலுத்துவதில் எந்த மத, சாதி, அரசியல் அமைப்பும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகள். எனில், அரசியல், மதவாதம், சாதியப் பித்து மூன்றும் ஒரே அம்பாக வீழ்த்திய இரையே பெருமாள்முருகன்.
3
கடந்த டிசம்பர் மாத நடுவிலிருந்தே பெருமாள் முருகனுக்கு ‘மாதொரு பாகன்’ நாவலை முன்னிறுத்தி அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. தொலைபேசி வழியாகவும் அநாமதேய நபர்களின் வாய்மொழியாகவும் வந்த இந்த எச்சரிக்கைகள் அவரைக் கலவரப் படுத்தியிருக்கின்றன. இதைத் தொடர்ந்தே கூட்டம் சேர்ந்து நாவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் தரப்பைச் சொல்ல அனுமதிக்காமலேயே நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. சூழ்நிலையின் இறுக்கத்தால் தளர்ந்துபோன நிலையில் நாவலாசிரியர் ஊர்ப் பெயரை மாற்றவும் சில பகுதிகளை நீக்கவும் இசைந்தார். இந்த இசைவைத் தனக்குக் கிடைத்த முதல் ஆயுதமாகக் கருதிய எதிர்ப்புக் கூட்டம் அவரை மண்டியிடச் செய்வதில் குறியாக இருந்தது. புத்தகத்தைச் சாமியாக நம்பும் அந்தக் கூட்டமே நாவலின் பிரதிகளை எரித்தும் செருப்பால் அடித்தும் தனது ‘பக்தியை’ வெளிப்படுத்திக் கொண்டது. சாதியின் பெயரால் ஊரைத் திரட்டிக் கடை அடைப்பு செய்தது. மத சாதியக் கூட்டணியின் அராஜகச் செயலுக்கு அரசாங்க அதிகாரம் துணைபோனதுதான் இந்தப் பிரச்சனையின் அவமானகரமான அம்சம். ஒரு தனி மனிதனுக்கு எதிராக ஊரே திரண்டு அத்துமீறலில் ஈடுபட்டபோது பாதுகாப்பளிக்க இயலாது என்று கையை விரித்தது. உயிருக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் ஊரைவிட்டு வெளியேறச் சொன்னது.
பெருமாள்முருகனால் திருச்செங்கோட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படவில்லை. மாறாக அவரது எதிர்ப்பாளர்களே அந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்பது தெரிந்தும் மாவட்ட நிர்வாகத் தரப்பு ஒதுங்கிக் கொண்டது சந்தேகத்துக்கு இடமளித்தது. பின்னர் நடைபெற்ற சம்பவங்கள், சந்தேகமே வேண்டாம், நிர்வாக எந்திரம் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அல்ல; பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் சார்பாகவே இருந்தது என்பதை நிரூபித்தது. பெருமாள்முருகனை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததில் இந்த ஒருதலைச் சார்பு தெளிவானது. இருதரப்புக்கு இடையில் பிரச்சனை என்றால் நடுவராக இருப்பவர் இரு தரப்பையும் ஒன்றாக அமர்த்திப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுதானே வழக்கம்? நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி இந்தப் பொது மரபுக்கு நேர் எதிராக இரு தரப்பினரிடமும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. பதினான்கு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பெருமாள்முருகனையும் வெவ்வேறாக வைத்தே பேச்சு நடத்தப்பட்டது என்பதைக் கூட்டத்தை நடத்திய அதிகாரியே உறுதிப்படுத்துகிறார். தன்னிடம் என்ன சொல்லப்பட்டது என்பதை பெருமாள்முருகன் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அவர் வெளிப்படையாகச் சொல்லும்வரையில் அரை உண்மைகள்தான் முழு உண்மைகளாகப் பேசப்படும். ஆனால் அவர் வலுவாகக் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறார் என்பதை மாவட்ட ஆட்சியர் அறையை விட்டு வெளியே வரும் அவரது தோற்றம் மறைக்காமல் காட்டி விடுகிறது. ஆன்மாவின் மரணத்தை உள்ளுக்குள் அனுபவித்த அந்த வேதனை முகம் இன்று பெருமாள்முருகனுடையது மட்டுமாக அல்லாமல், கருத்துரிமைப் போராட்டத்தின் குறியீடாகவே மாறிவிட்டது.
அவருடன் சென்ற வழக்குரைஞர் ஜி. ஆர். சுவாமி நாதனின் ஃபேஸ் புக் குறிப்பு அதை வலுப்படுத்துகிறது. ‘உண்மையாக வருந்துகிறேன்’ என்று பெருமாள்முருகன் எழுதிய வாசகத்தை ‘நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என்று மாற்றி எழுதும்படி அதிகாரி தெரிவித்தார் என்று வழக்குரைஞர் குறிப்பிடுகிறார். ‘இல்லை, முதன்முறையாகக் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டபோதே பெருமாள்முருகன் மன்னிப்பு கேட்பதாகவும் புத்தகங்களைத் திரும்பப் பெறுவதாகவும் எழுதிக் கொடுத்தார்’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரி மறுக்கிறார். அதை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டால் மாவட்ட நிர்வாகம் அத்துமீறலுக்குத் துணை போனது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். போராட்டக்காரர்களின் முக்கியமான கோரிக்கைகள் இரண்டுக்கும் பெருமாள்முருகன் இசைந்த பின்னும் கடையடைப்பு நடத்த எப்படி அனுமதிக்கப்பட்டது? ஏன் இரண்டாம் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது?
இந்த நெருக்கடிகளும் தனிமைப்படுத்தலும் பெருமாள்முருகனுக்குத் தாங்க முடியாத அழுத்தத்தைத் தந்திருக்கின்றன. அதன் திணறலில்தான் எதிர்தரப்பு சொன்ன நிபந்தனைகளுக்கு அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி தனது ஃபேஸ் புக் பதிவில் அவர் வெளியிட்ட மரண சாசனம் அந்த உயிர்த் திணறலை அப்பட்டமாகச் சொல்லுகிறது.
‘எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். അവൻ கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியிலும் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.’ என்று எழுதிய வாசகங்கள் அவரது கால்நூற்றாண்டுக் கால இலக்கியப் பங்களிப்புகளை விடவும் வலுவான எழுத்தாக நிலைபெற்றிருப்பது உணர்வுள்ள எவரையும் நாணச் செய்யும் செயல். ஒரு காலத்திலும் கழுவிப் போக்க முடியாத கறை. சிந்திக்கிற எல்லார்மீதும் இந்தக் கறையைப் படியச் செய்ததில் சிந்தனை விரோதிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் அபாய அறிகுறி.
4
பெருமாள்முருகன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் எழுத வந்தவர். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலமாக படைப்புகளாகவும் பதிப்புகளாகவும் ஆய்வு நூல்களாகவும் அவர் பங்களித்திருப்பவை குறிப்பிடத்தக்கவை. இந்தப் படைப்புகளைப் பற்றிய மேலோட்டமான விவரமாவது இருந்திருக்குமானால் போராட்டக்காரர்களின் தரப்பை நியாயப்படுத்த யோசிக்கலாம். விவாதத்துக்கு உள்ளான ‘மாதொருபாகன்’ உட்பட அவரது எல்லா நாவல்களிலும் ஒரு பொது இயல்பைக் காண முடியும். அவை அனைத்தும் அவரது சொந்த மண்ணான திருச்செங்கோட்டையும் சுற்று வட்டாரங்களையுமே களமாகக் கொண்டவை. இன்று எந்தக் கவுண்டர் சாதியை இழிவுபடுத்தி விட்டார் என்று பழி தூற்றப்படுகிறாரோ அந்தச் சாதியைச் சேர்ந்த மக்களே அவரது முதன்மையான கதை மாந்தர்கள். அவர்களது வாழ்க்கையையே அவர் சித்திரித்திருக்கிறார். அவர்களது மொழியையே எடுத்தாண்டிருக்கிறார். அவர்களது பண்பாட்டில் இருக்கும் மேன்மைகளையும் குறைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். தங்கள் சாதியை இழிவுபடுத்தி விட்டார் என்று இன்று குரல்வளை புடைக்கக் கத்துபவர்கள் அவர் இதுவரை எழுதியிருக்கும் படைப்புகளை வாசித்திருந்தால் இந்த உண்மையை அறிந்திருக்க முடியும். மாதொருபாகன் நாவலிலும் அந்த வாழ்க்கையின் இன்னொரு பக்கமே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. தனக்கு நெருக்கமாக அறிந்த வாழ்க்கையை அல்லாமல் அந்நியமான வாழ்க்கையை எழுத்தாளனால் படைக்க முடியாது என்ற அடிப்படை புரிந்திருக்கும்.
தான் கேட்டு அறிந்த வாய்மொழிக் கதை ஒன்றையே பெருமாள்முருகன் தனது படைப்பில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அது என்ன? திருச்செங்கோடு வட்டாரத்தில் நிலவியதாகச் சொல்லப்படும் ஒரு வழக்கத்தின் பின்னணியில் அமைந்த கதை. திருச்செங்கோட்டு திருவிழா இரவில் பிள்ளைப் பேறு வேண்டி வரும் பெண்கள் ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். இது ஒரு சடங்காக அப்பகுதியில் நிலவுவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ‘ஒழுக்கத்துடன்’ வாழும் பெண்கள் யாருடனோ உறவுகொண்டு பிள்ளை பெறுகிறார்கள் என்று இதை திருச்செங்கோட்டுக்காரர்கள் மொழிபெயர்ப்பதன் மூலம் பெருமாள்முருகன் அவதூறு எழுத்தாளனாக மாற்றப்பட்டிருக்கிறார். இது ஒரு சடங்கு. குழந்தையின்மையையே அல்லும் பகலும் கொல்லும் பேச்சாக வதைக்கும் அதே சமூகமே வேறு வழியின்றி இப்படி ஒரு ‘ரகசியப் பரிகார’த்தை உருவாக்கியிருக்கிறது. நாவலின் முன்னுரையில் இந்தச் சடங்கின் நிலவரம், காலம் ஆகியவற்றை நாவலாசிரியர் விரிவாகவே எடுத்துச் சொல்லுகிறார். கதையின் போக்கிலும் காலம் சொல்லப்படுகிறது. ஆண்கள் குடுமி வைத்திருந்த காலம் என்று பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. இன்று போராட்டம் நடத்துபவர்கள் தாங்கள் அறியாத காலத்தின் தொடர்ச்சியாகவே தங்களை கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் பெண்களை நாவல் இழிவு படுத்தியிருக்கிறது என்று வாதாடுபவர்கள் அப்படி ஒரு சடங்கு இருந்ததில்லை என்று வலுவாக நிரூபிக்க முயலவில்லை. மாறாக ஊர்ப் பெயரை மாற்ற வேண்டும் என்றே கோருகிறார்கள். இதிலுள்ள பொய்மையை எப்படிப் புரிந்து கொள்வது? தங்கள் சமுதாயப் பெண்களைப் பிள்ளைப் பேறின்மைக்காக வதைத்த கொடுமையை எளிதாக எடுத்துக்கொள்ளும் ஆதிக்க மனப்பான்மையை என்னவென்று விளக்குவது? நாவலின் பெரும் பகுதியிலும் இந்தப் பிரச்சனையே விரிவாகப் பேசப்படுகிறது. அதன் முடிவாகவே மேற்சொன்ன சடங்கு இடம் பெறுகிறது.
இதற்கான ஆதாரங்களை பெருமாள்முருகன் அளிக்கவில்லை என்பதை வைத்தே அப்படி ஒரு சடங்கே இருக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் சொல்லுகிறார்கள். வாய்மொழி வழக்கிலிருந்து இந்த ஆதாரங்களைத் திரட்டியதாக ஆசிரியர் முன்னுரையில் சொல்லுகிறார். அதை அளித்தவர்களைப் பற்றி வெளியே சொல்லுவது ‘ஆபத்தானது’ என்ற எச்சரிக்கை உணர்விலேயே மௌனம் காக்கிறார் என்று தோன்றுகிறது. அந்த மௌனம் அவருக்கே ஆபத்தாக முடிந்திருக்கிறது.
பேராசிரியர் க. கிருட்டினசாமி, கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறையில் பணியாற்றியவர். 1980 ஆம் ஆண்டு ‘கொங்கு நாட்டுப் புறப் பாடல்கள்’ என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார். மக்கள் வெளியீடாக வெளிவந்த இந்த நூலின் இரண்டாம் தொகுப்பு கொங்கு வட்டாரங்களில் நிலவிய சடங்குகளைப் பற்றிய பாடல்களையும் கொண்டிருக்கிறது. மானிடவியல் நோக்கில் தொகுக்கப்பட்ட இந்த நூலின் முன்னுரையில் கிருட்டினசாமி முன்வைக்கும் தரவுகள் சில தெளிவுகளை அளிக்கின்றன.
‘‘நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பாளர்கள் எத்தனையோ பேருக்கு இந்தப் பாடல்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் அசிங்கமானது, நாகரிகமற்றது என்று கருதி விட்டிருக்க வேண்டும். பாடல்களில் பயிலும் சொற்களைக் கொண்டே இவற்றைக் கொச்சைப் படுத்துதல் ஆய்வாகாது. இப்பாடல்கள் நூற்றுக்கும் அதிகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஒரு சிலவே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலும் உடலுறவு உடலுறுப்புப் பற்றிய சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் இந்நூல் வெளிப்படினும் சட்டத்தின் கரங்களில் சிக்கிச் சீரழிந்து ஆய்வாளர்கட்கும் அறிஞர்கட்கும் கிடைக்காமல் போய் விடக் கூடாதென்ற அச்சத்தின் காரணமாகவே இச் சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆகவே இச்சொற்களை நீக்கி வெளியிடுவதற்கு நாட்டுப்புற அறிஞர்களிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச் சூந்துப் பாடல்களைச் சேகரிக்கும் பொழுது இரு இன்றியமையாச் செய்திகள் கிடைக்கப் பெற்றன. அவற்றில் ஒன்று: பெண்ணைத் தெய்வத்திற்குப் பலியிடுதல். மற்றொன்று வரன்முறையற்ற உடலுறவு (Promiscuity).’’
திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய பகுதிகளில் சூந்துத் திருவிழா என்று கடைப்பிடிக் கப்பட்ட நெருப்புத் திருவிழாவின்போது பின்பற்றப்பட்ட சமுதாயச் சடங்குகளை மையமாகக் கொண்டது க. கிருட்டினசாமியின் ஆய்வு. முன்னுரையில் குறிப்பிடும் இதே செய்தியை நூலின் உள் பக்கங்களில் பாடல்களின் ஆதாரத்துடன் விரிவாகச் சொல்லுகிறார். திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய பகுதிகளில் சூந்துத் திருவிழா நடைபெறுவதைச் சுட்டிக் காட்டுகிறார். சில இடங்களில் ஒரு நாளும் வேறு இடங்களில் மூன்று நாட்களும் திருவிழா கொண்டாடப்படுவதாகச் சொல்லுகிறார்.
‘‘இந்த மூன்று நாட்களும் இளைஞர்கள் ஆண் பெண் உடலுறவுப் பாடல்களைப் பாடுகின்றனர். இந்த மூன்று நாட்களும் எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் உடலுறவு கொள்ளலாம்; யாரும் எந்தத் தடையும் சொல்லக் கூடாது என்று தொகுப்பாசிரியருக்கு உதவியவர் கூறினார். இதைக் கேட்டுக் கொண்டு அருகிலிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவரிடம் உண்மையா பொய்யா என்று விசாரித்ததில் அவர் மறுக்கவுமில்லை; ஒப்புக் கொள்ளவும் இல்லை. சிரித்துக் கொண்டார்.’’ (கொங்குநாட்டுப்புறப் பாடல்கள் மானிடவியல் பக் 133 - 134 ).
பேராசிரியர் கிருட்டினசாமி நூலைத் தொகுத்தது எழுபதுகளின் இறுதியில். அதாவது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதும் நடைமுறையில் இதுபோன்ற சடங்குகள் இருந்திருக்கின்றன என்பதையும் பதிவு செய்திருக்கிறார். ஒரு பண்பாட்டின் கூறுகளில் மறைமுகமாக இந்தச் சடங்குகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுக்கு அந்தச் சமுதாயத்தின் இசைவு இருந்திருக்கிறது என்பது உண்மை. இந்த மானுட இயல்பே எந்த எழுத்தாளனுக்கும் படைப்புக்கான கச்சாப் பொருள். அதன் மீதே அவன் தன்னுடைய கற்பனைசார்ந்த படைப்பை உருவாக்குகிறான்.
பெருமாள்முருகன் செய்ததும் இதுவே. அவர் தான் அறிந்த உண்மையைப் புனைவாக ஆக்குகிறார். அதற்கான உரிமை எழுத்தாளனாக அவருக்கு இருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்பட வேண்டியது. அந்தப் புனைவு முற்றிலும் கற்பனையானது என்று வாதிப்பதன் மூலம் எதிர்ப்பாளர்கள் செய்ய முயல்வதுதான் பொய்மை. தங்கள் பண்பாடு அப்பழுக்கில்லாத தூய்மையானது என்று காட்ட முனையும் அபத்தம். ஏனெனில் எந்தப் பண்பாடும் இன்று இருப்பதுபோன்ற நிலையில் இருக்கவில்லை. அவை தமது குறைகளிலிருந்தும் கறைகளிலிருந்தும் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன. இதை சாதியக் காமாலை படர்ந்த கண்களுக்கு எப்படிக் காட்டுவது? இந்தப் பார்வைக் குறைதான், நாவலில் இடம் பெறும் சந்தர்ப்பங்களில் தங்களை வைத்துப் பார்த்துக் கொந்தளிக்கின்றன.
மாதொருபாகன் நாவலை எதிர்ப்பாளர்கள் மேலோட்டமாகக்கூட வாசிக்கவில்லை என்பதை அவர்களது செயல்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. ஒரு அத்தியாயத்தையும் சில வரிகளையும் எடுத்துக் காட்டி ஊரை எரியச் செய்ய அவர்களால் முடிந்திருக்கிறது. நாவலில் இடம் பெறும் பின்வரும் வரிகளை அடிக் கோடிட்டுக் காட்டியே அவர்கள் இந்தப் பொய்யுரையை நம்பச் செய்திருக்கிறார்கள். அந்த வரிகள் இவை:
“இறக்கத்துக் கோவிலுக்கு எதிரே இருந்த தேவரடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமே இல்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைகளும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.’’ (மாதொருபாகன் பக்: 87)
இந்த வரிகள்தாம் அந்தப் பகுதிப் பெண்களை இழிவுபடுத்தியதாகச் சொல்லப்படுபவை. ஒரு கதாபாத்திரத்தின் கூற்றை எழுதியவனின் கூற்றாக நம்பும் அப்பாவிகளா திருச்செங்கோட்டு மக்கள்? ஏதோ காலத்தியக் கதையில் சொல்லப்பட்ட வாசகங்கள் இன்றைக்கு இருக்கும் தங்களைப் பற்றியது என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு விவரமில்லாதவர்களா கல்விப் பண்ணைகள் செழித்தோங்கியிருக்கும் வட்டாரத்துப் பொது மக்கள்? அப்படி நம்பும் பட்சத்தில் இனி எவரும் எவரைப் பற்றியும் எழுதுவது இயலாது. எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது. இலக்கியத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும்.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்ட முதல் நாவல். கணவனை இழந்த நாகம்மாள் கொழுந்தனின் பராமரிப்பில் வாழ்கிறாள். இன்னொருவனின் துர்ப்போதனையால் கொழுந்தனுடன் ஏற்பட்ட பகை முற்றி அவனைக் கொன்றே விடுகிறாள். இதை வைத்து அந்த சாதியைச் சேர்ந்த எல்லாப் பெண்களும் கொழுந்தனைக் கொல்பவர்கள் என்ற பொது அபிப்பிராயத்துக்கு வந்து விடலாமா?
பிள்ளைப் பேறின்மையால் தூற்றப்படும் பெண்மையைப் பற்றிய நாவல்தான் ‘மாதொருபாகன்’. அதை அந்தக் கோணத்தில் எதிர்ப்பாளர்கள் பார்க்கவே இல்லை என்பதுதான் பிரச்சனையின் மையம். அப்படிப் பார்க்கப்பட்டிருந்தால் இன்னும் நிலவுடைமை மதிப்பீடுகள் நிலவும், சொத்துக்கு வாரிசு வேண்டும் என்ற கருத்தாக்கம் பின்பற்றப்படும் ஒரு சாதியைச் சேர்ந்த பெண்களின் துயரம் வெளிப்பட்டிருக்கும். அதை மறுத்து நாவலை தெய்வக் குத்தமாகவும் சாதிய அவமதிப்பாகவும் சித்திரிப்பதில் அதிகார வேட்கையும் அதை அடைய யாரையும் காவு கொடுக்கும் கொடும் முனைப்பும்தான் பகிரங்கமாகின்றன. பிள்ளை இல்லாத பெண்ணின் துயரத்தை இதற்கு முன்னரும் பெருமாள்முருகன் எழுதியிருக்கிறார். அந்தக் கதையின் தலைப்பும் ‘திருச்செங்கோடு’ தான். அந்தச் சிறுகதையில் துயரம்தான் மாதொருபாகனின் துயரக் கடலின் மூல ஊற்று. ஆனால் இதையெல்லாம் கருத்து ஊனமுற்றவர்களிடம் எப்படிச் சொல்வது? சொன்னால் எடுபடாது என்பதைத்தான் பெருமாள்முருகனின் இன்றைய நிலை காட்டுகிறது. அந்த ஆற்றாமைதான் எழுத்தைக் கைவிடச் செய்தது. இது கோழைத்தனமோ, பின் வாங்கலோ அல்ல; ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் துணிச்சல்தான். இந்த விவகாரத்தில் பெருமாள்முருகன் பின்வாங்கி விட்டார் என்று தவளைக் கூச்சல் போடும் எவர் இந்தத் துணிவைக் காட்டுவார்?
5
தமிழில் வட்டார வழக்குப் படைப்புமுறையின் முன்னோடி என்று சொல்லப்படும் ஆர். ஷண்முக சுந்தரத்தின் மரபைச் சேர்ந்தவர் பெருமாள்முருகன். எல்லா அர்த்தத்திலும் இந்த வாசகம் பொருத்தமானது. கொங்கு வட்டாரத்தின் வாழ்க்கையை அதன் உயிரும் தசையுமாகச் சித்தரித்தவர் ஷண்முக சுந்தரம். அவரது பிரபலமான படைப்புகளான ‘நாகம்மாள்’, ‘சட்டி சுட்டது’, ‘அறுவடை’ ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த வட்டாரத்தின் வாழ்க்கையைப் பேசியவை பெருமாள்முருகனின் நாவல்களே. ஷண்முகசுந்தரத்துக்குப்பிறகு ஒரு தலைமுறைக் காலம் எடுத்துச் சொல்லும்படியாக எந்தவித இலக்கியப் பிரதிநிதித்துவமும் பெறாத கொங்கு வட்டார வாழ்க்கை பெருமாள்முருகனால்தான் மீண்டும் கவனத்துக்கு வந்தது. ஷண்முகசுந்தரம் பின் பற்றிய இயல்புவாதப் போக்கையே பெருமாள்முருகனும் பின்பற்றினார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. இயல்புவாத எழுத்தின் குறைகளும் சிறப்புகளும் இருவரின் எழுத்துகளிலும் காணப்படுகின்றன. கதைப் பொருளுக்கு அந்நியமான எதையும் இந்த வகை எழுத்து அனுமதிப்பதில்லை. மிகையான உணர்ச்சிச் சித்திரிப்பையோ அழகியல் மிகுந்த நடையையோ இந்தப் படைப்புகள் பின்பற்றுவதில்லை. தமிழில் இந்த வகை எழுத்தை முன்வைத்தவர்களாகப் பலரைச் சொல்ல முடியும். சங்கர்ராம், ஆர். ஷண்முகசுந்தரம், நீல. பத்மநாபன், கண்மணி குணசேகரன், எம். கோபாலகிருஷ்ணன் என்று ஒரு வரிசையைச் சொல்லலாம். இவற்றிலும் கொங்கு வட்டாரப் படைப்பாளிகள் ‘வறண்ட எழுத்து’க்குச் சொந்தக்காரர்கள். ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் களமே வறட்சியானது. வெம்மையும் தகிப்புமான இந்த நிலத்தின் வாழ்க்கையையே அவர்கள் எழுத்தில் முன்வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பிற வளமான நிலப்பகுதி சார்ந்த எழுத்துகளின் பசுமையோ, ஜிலுஜிலுப்போ இந்த எழுத்தில் வருவது சாத்தியமில்லை. இந்த இயல்பை அப்படியே சித்தரிப்பதில்தான் படைப்பாளிகளின் கவனமும் இருந்திருக்கிறது. இந்தப் படைப்பாளிகளின் படைப்பாக்க முறை வேறு விதமானதாக அமைந்திருக்குமானால் அவர்களது எழுத்துகள் பசுமை பூத்துத் தென்பட்டிருக்கலாம். தங்களது ஜீவாதாரமான களத்தை விட்டு விலக விருப்பமில்லாததனாலேயே இந்த இயல்புள்ள எழுத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த அளவில் அவர்களது நேர்மை பாராட்டத் தகுந்தது. பெருமாள்முருகன் பிரச்சனையிலும் இதைப் பார்க்க முடியும். தன்னைச் சூழ இத்தனை நெருக்கடிகள் உருவான பின்னும் தனக்குப் பிரியமான மண்ணை விட்டு விலகி நிற்க அவர் விரும்பவில்லை. தன் எழுத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஊரைவிட்டு ஓடத் துணியவில்லை. எழுத்தைத் துறக்கவே முன்வருகிறார். இந்த இடப் பற்று அவரை எதிர்க்கும் கூட்டத்துக்கும் புரியவில்லை. அவரது எழுத்துக்கு இலக்கிய மதிப்பில்லை என்று இடமும் சூழலும் அறியாமல் உளறும் ‘இலக்கிய அறங்காவலர்’களுக்கும் விளங்கவில்லை.
6
பெருமாள்முருகன் எனது இருபத்தைந்து ஆண்டுக் கால நண்பர். அவரது எழுத்துகள் அச்சேறத் தொடங்கிய அன்று முதல் ஆரம்பித்த நட்பு இது. அவரது முதல் இரண்டு நாவல்களான ‘ஏறு வெயில்’, ‘நிழல் முற்றம்’, முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருச்செங்கோடு’, முதல் கவிதைத் தொகுப்பான ‘நிகழ் உறவு’ ஆகியவற்றின் படைப்பாக்க நாட்களில் சிறு துரும்புப் பங்கு எனக்கும் உண்டு. எழுத்து தொடர்பான விஷயங்களில் கருத்து வித்தியாசங்கள் உண்டு. எனினும் ஆதாரமான அக்கறைகளில் அதிக வேற்றுமை இல்லை என்றே நம்புகிறேன். தொண்ணூறுகளில் செயல்பட்ட இடதுசாரி அமைப்பு ஒன்றின் பணிகளில் அவருக்குப் பெரும் பங்கும் எனக்கு மிகச் சிறுபங்கும் இருந்தன. இந்தத் தோழமை வாயிலாகவே அவரை மதிப்பிட விரும்புகிறேன். மிக எளியவர். மென்மையானவர். ஆனால் எழுத்தில் எந்த சமரசங்களுக்கும் ஆட்படாதவர். எழுத்தை முன்வைத்து எந்த இடத்தையும் அடைய விரும்பாதவர். இதுவரை அவர் பெற்றிருக்கும் விருதுகளும் மதிப்புகளும் எழுத்தின் வலிமையால் அவரைத் தேடி வந்தவைதாம். தான் நம்பிய மதிப்பீடுகளுக்கு ஏற்பவே அவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். திருமணம், கல்லூரிப் பணி, எழுத்துப் பணி எதிலும் தனது நம்பிக்கைகளுக்கு எதிரான நிலையில் அவர் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த நிலைதான் அவரை ‘சரி’யின் தரப்பில் உறுதியாக நிற்கச் செய்திருக்கிறது. சுய சாதியை விமர்சனபூர்வமாக அணுகச் செய்திருக்கிறது. தனது பணிக்களமான கல்விப்புலத்தில் நிகழும் அநீதிகளை உரக்க எடுத்துச் சொல்ல வைத்திருக்கிறது. அதுவே மாணவர்கள் இடையிலும் இலக்கியவாதிகள் இடையிலும் நட்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த நல்ல மதிப்பீடுகளே அவரை இன்று வீழ்த்தவும் காரணங்களாகி இருக்கின்றன. அப்படியானால் நாம் சந்தர்ப்பவாதத்தின் காலத்தில் வாழ்கிறோம் என்பதுதான் பொருள்.
அவரது சுய சாதி விமர்சனம் ஏற்கனவே அவரைத் தனிமைப் படுத்தியிருக்கிறது. படைப்புகளில் வெளியாகும் அதே விமர்சனம் இன்று இலக்கியத் துறவுக்கும் உள்ளாக்கி இருக்கிறது. சாதியப் பெருமிதம் கொண்ட அவரது சொந்த சாதி ஆட்களால் அவரது படைப்புகளைத் தாங்க முடியவில்லை. கல்விப் புலத்தில் நடக்கும் ஊழல்களை அவர் அம்பலப்படுத்தியது ‘கல்வித் தந்தை’களை இந்த ஆளுக்கு ஒரு பாடம் கத்துக் குடுத்துப் போடோணும் என்று சீண்டி விட்டிருக்கிறது. சென்ற ஆண்டு அவர் தொகுத்து வெளியிட்ட நூல் ‘சாதியும் நானும்’. அவரது மாணவர்களும் சக நண்பர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் வெளிப்படும் உண்மையின் கோர முகம் மத - சாதியக் கூட்டணியின் ஆத்திரத்துக்கு அடிகோலியது. இந்தப் பாசிச மனப்பான்மைகளின் ஒட்டு மொத்த இரையாக அவர் மாறினார் என்பது சிந்திக்கும் எல்லாருக்கும் அவமானத்தைத் தருகிறது. கருத்தைச் சொல்ல அவமானப்படுவது நாகரிக சமுதாய அமைப்பில் அடிமைத்தனமானது என்ற விழிப்புணர்வே இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெருமாள்முருகனுக்கு அளிக்கப்படும் தார்மீக ஆதரவின் அடிப்படை. ஒரு தமிழ் எழுத்தாளன் உலகம் முழுவதும் பேசப்படுவது போற்றுதற்கு உரியது. ஆனால் அந்தப் போற்றுதலுக்கான காரணம் தமிழில் எழுதும் தன்மானமுள்ள எந்த எழுத்தாளனுக்கும் தலைகுனிவையே ஏற்படுத்துகிறது. தனக்கு நேர்ந்த பிரச்சனை பற்றி பெருமாள்முருகன் இதுவரை பேசவில்லை. பிரச்சனையின்போது தனக்கு ஆதரவாகத் திரண்ட மாணவர்களையும் அவர் விலக்கி இருக்கிறார். நண்பர்களையும் தவிர்த்திருக்கிறார். தன் காரணமாக யாரும் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அழைத்தபோது விசுவாசமான பிரஜையாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். அங்கே என்ன பேசப்பட்டது என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. தனது எழுத்துலக மரணத்தைத் தானே அறிவிக்கும் அளவுக்குத் தன்னைக் கொண்டு சேர்த்த சம்பவங்களைச் சொல்லாமல் இருப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கலாம். அதற்கு எந்த விலையும் இல்லை என்பதைக் கடந்த நாட்கள் உறுதிப்படுத்துகின்றன. பிரச்சனையை மலினப்படுத்தி விடவோ எளிமைப்படுத்தி விடவோ முடியாது. ஒருவன் என்ன சிந்திக்க வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதை ஒரு மதவாதக் கூட்டமோ சாதி ஆதிக்கமோ நிர்ணயிக்க அனுமதிக்க முடியாது. பெருமாள்முருகன் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதைத்தான் வலியுறுத்துகிறது. பெருமாள்முருகனைக் கட்சி சேர்க்குமாறு அது சொல்லியிருப்பதன் பொருள் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதே. மாவட்ட நிர்வாகம் செய்த பாரபட்சப் பஞ்சாயத்தில் சொல்ல முடியாமற்போன உண்மைகளை பெருமாள்முருகன் சொல்லவேண்டும் என்பது வேண்டுகோள். அப்படிச் சொல்வது அவருக்காக அல்ல; எழுத்தை உருவாக்கும், எழுத்தை வாசிக்கும், எழுத்தை மதிக்கும் எல்லாருக்குமானது.
பிரச்சனைகள் தந்த அழுத்தமும் சூழ்நிலைகள் ஏற்படுத்திய நெருக்கடியும் இலக்கிய உலக ஞானச் சுடர்களின் வயிற்றெரிச்சலும் பெருமாள்முருகனை வீழ்த்தி இருக்கின்றன. இனி எழுத்துமில்லை, இலக்கியமுமில்லை என்று கசப்புடன் சொல்ல வைத்திருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள்வரை தனது முடிவில் மாற்றமில்லாமல் இருக்கிறார். அது அவரது தேர்வு. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்பதைக் காலம் அவருக்குப் புரியவைக்கும். அதுவரை அவரைச் சும்மா விடுவோம். ஆனால் இன்று இந்தப் பிரச்சனையும் விவாதமும் பெருமாள்முருகனைக் கடந்து சென்றிருக்கின்றன. விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அதன் கூர்மையான கேள்வி: எழுத்தை யார் ஆளுவது? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம், பெருமாள்முருகன் உட்பட.
காலச்சுவடு பிப்ரவரி, 2015
