கற்பனைப் பொன்னாவும் நிஜப் பொன்னாக்களும்

ஆசிரியர்: லாவண்யா மனோகரன் (லாவண்யா சுந்தரராஜன்)தேதி: 2026-08-07மூலம்: காலச்சுவடு (2016-04-01)
கற்பனைப் பொன்னாவும் நிஜப் பொன்னாக்களும்

பெருமாள்முருகனின் மாதொரு பாகன் நாவலை முன்வைத்து எழுந்த சர்ச்சையின் காரணமாக, அதனை இணையம் வழி மின்நூலாகப் படிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம். பெருமாள்முருகன் மீது தமது சுயநலங்களுக்காக ஒரு தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை, சமூகத்தில் குழந்தையில்லாத தம்பதியினரில் பெண்ணை மலடி என்றும் ஆணைக் கையாலாகாதவன் என்றும் எள்ளி நகையாடும் வன்முறைக்குச் சற்றும் குறைந்தது அல்ல.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இந்த நாவல் இழிவு செய்கிறதென எடுத்துரைக்கப்படும் கூற்றை முற்றாக மறுக்க வேண்டியுள்ளது. அந்தப் பதினான்காம் நாள் திருவிழாவிற்குச் செல்லும் பொன்னா தனக்கான சாமியாக காளியையே தேடுகிறாள். அவள் சென்றுவிட்டாள் என்று தெரிந்த காளி கிட்டத்தட்ட இறந்து போகிறான்.

பொன்னாவையும் காளியையும் அப்படி முடிவெடுக்க வைத்தது அவர்கள் வாழும் சமூகமன்றி வேறு எது? குழந்தையற்ற தம்பதியினரை அருகிலிருந்து பார்க்கும் எவராலும் ஒரு துளியேனும் கண்ணீர்விடாமல் நாவலின் அந்தச் சில வரங்களைக் கடக்கவியலாது. உதாரணமாக காளியை மறுமணம் செய்யச் சொல்லி பொன்னா முன்னிலையிலேயே “கெரகம் சில மாடுங்க இப்படிதான் மாப்ள, எத்தனை முறை போட்டாலும் சினையாகாது, மாட்டை மாத்திறுடா மாப்ள” என்கின்றார்கள். தன் வயிற்றில் கரு தரிக்க பொன்னா குமட்டக் குமட்ட வேப்பிலைச் சாறு குடிக்க வேண்டியிருக்கிறது. யார் எதைச் செய்யச் சொன்னாலும் கேட்டு இலை தழையைத் தின்று “எனக்கு பதில் ஒரு வெள்ளாட்டை கட்டி இருந்தால் இத்தன தழ தின்னதுக்கு ஒரு பட்டு குட்டி போட்டிருக்கும்” என்று மனவேதனை அடைய வைக்கிறது.

ஆண்கள் கூட ஏறிச் சுற்ற பயம்கொள்ளும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், மலைமேல் அமைந்திருக்கும் வறடிக்கல்லை பொன்னா தன் உயிரைப் பணயம் வைத்து சுற்றி வர வேண்டியிருக்கிறது. பிள்ளையில்லா சொத்துக்கென்று சொந்தங்கள் காட்டும் போலித்தனமான நெருக்கம், பிள்ளைதான் இல்லையே எங்களுக்குத் தந்தால் என்ன என்ற அவர்களது மனோபாவங்கள், தங்கள் பிள்ளைகளை அனுப்பி இவர்களுக்கு தரும் தொல்லைகள், தற்செயலாக பிள்ளை அடிபட்டாலும் “பெற்றால்தானே தெரியுமென்ற” ஏச்சுகள் பேச்சுகள். நெருங்கிய உறவின் விசேஷங்கள், விதையிடல்களில் பிள்ளையற்றவள் தொட்டது உருப்படாது என்ற குத்தல்கள். பொன்னாவின் கதி இப்படி என்றால் காளிக்கோ வேறு விதத்தில் அவமானம். “குடிக்கிற தண்ணி அருமையா இருந்து என்னடா, உடற தண்ணி அருமையா இருக்கணும்” என்றும், பொன்னாவை குறிவைத்து வரும் கருப்பண்ணன் “தென்னைக்கு ஒழுங்கா தண்ணி உடறது இல்லையா? குரும்பா வாடி கிடக்குது பாரு” என்கிறான்.

குழந்தையில்லாத காரணத்தால் அவளை எளிதாய்த் தமது காமவலைக்குள் சிக்கவைக்கலாம் என்று அணுகும் ஆண்களைப் பற்றி பொன்னா “எனக்கு பிள்ளையில்லைன்னுதானே இப்படி பார்க்கிறான்க, இருந்தா இந்த கேவலம் இல்லைதானே” என்று காளியிடம் புலம்புகிறாள். பதினான்காம் நாள் திருவிழாக்கு நீ போகிறாயா என்று காளி கேட்கும்போது “நீ போ சொன்னா போறேன்” என்று சொல்லிவிட்டு,அவன் மனம் வருந்தும்போது மிகவும் துன்புறுகிறாள். காளி எதிர்பார்த்ததுபோல் பதில் சொல்லாமல் போனதற்காகவே இரண்டு வருடம் தன் பெற்றோரும் அண்ணனும் வந்து அழைத்தும் தேர்த்திருவிழாவிற்கு செல்லாமல் இருக்கிறாள்.

தனக்குப் பின் கல்யாணம் செய்துகொண்டு உடனே பிள்ளை பெற்றுவிடுகிற பெண்ணைப் பார்க்கும்போது ஒரு கணமேனும் பொன்னா தீயை விழுங்கியதுபோல தடுமாறுகிறாள். எங்கு சென்றாலும் “கல்யாணம் ஆச்சா, எத்தனை வருசம் ஆச்சு, எத்தனை குழந்தைகள்?” என்று மறுகிறாள், உடல் குறுக்குகிறாள். கேட்காமல் இருப்போர்முன் எப்போது கேட்டுவிடுவார்களோ என்று அசூசையுடன் இருக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அவள் அழுகிறாள்.

இத்தனை அவமானங்களைத் தாங்கி, தாண்டி தன் உடல் வேறு எதற்குமன்றி, பிள்ளை பெறுவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வை அவள் பெறுகிறாள். ஒரு பிள்ளை பெற இயலவில்லை என்றால்,உயிரோடு இருப்பதைவிட இறப்பதே மேல் என்று மனம் குமைகிறாள். திருநாளின்போது “இந்த முறையும் கண்ணு திறக்கலைன்னா மல உச்சில இருந்து குதிச்சிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்கிறாள். அப்படி உயிர்விடுவதைவிட ஊர் ஏற்றுக்கொண்ட ஒரு சடங்கின்மூலம் பிள்ளை பெறுவது எப்படி இழிவானதாகும்? இந்த இடத்தில் பிள்ளைக்கென முன்பின் தெரியாத ஆணுடன் ஓர் இரவைக் கழிக்கவும், அதன்பின்னர் அவளுக்கு அதே ஆண்மகனின் அணுக்கம் தேவைப்பட்டால் அந்த உணர்வை அறுத்து எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டதும், ஒரு பெண் மீது திணிக்கப்பட்ட மிகக் கொடிய வன்முறை என்பதை ஆழமாகப் பதிய வைக்கிறது இந்த நாவல்.

பெண்ணின் உடல், மனம் மென்மையானது. பிற பெண்டிரைப் பார்த்தால் சற்றே பழகினால் கைத்தலம் பற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணம் ஆணுக்கு இருப்பதுபோல் பெரும்பாலான பெண்களுக்குக் கிடையாது. தன் உடலை அவள் எல்லோரிடமும் திறக்கத் தயாராக இருப்பதில்லை. பெண்ணின் மனதைத் தொடவியலாத எவனும் அவள் உடலை நெருங்கவியலாது. அது பாலியல் வன்முறையை ஒத்ததே. முன்பின் தெரியாத ஆடவன் ஒருவனுடன் தன்னைப் பகிர்ந்து குழந்தை தாங்க பொன்னா தயாராகி திருநாளுக்குச் செல்கிறாள் என்றால் அவள் தனது பெண்குணத்தை எத்தனை தூரம் தள்ளி வைத்திருக்க வேண்டும். அவ்விரவில் அதை ஒரு சாமி சடங்காகச் செய்யும் பெண்ணுக்கு அவ்வுறவு எவ்விதமான ஆறுதலைத் தரும். இது அவளுக்கு நிகழும் பெரும் அவமானம்.

சாமி சடங்கென்று அவள் சமாதானம் செய்துகொண்டு செல்லக் காரணம், தன் பன்னிரண்டாண்டு மணவாழ்வில் அடைந்திருக்கும் கொடுந்துயரங்களே. கணவனுடன் அவள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது அந்தரங்கம் எல்லோராலும் கூறு போடப்பட்டதன்பின் அவள் வெட்கமற்றவள் ஆகிறாள்.

“பதினான்காம் திருநாளுக்கு போகிறாயா” என்று பொன்னாவிடம் காளி கேட்கும்போது “நீ சொன்னா போறேன்” என்கிறாள். ஆனால் அது அவன் எதிர்பார்த்த பதிலல்ல. பிள்ளையில்லாமல் பொன்னா தவிப்பதையும் பலமுறை உணர்ந்திருந்தும், அவளும் தானும் நிறைய அவமானங்களைச் சந்தித்திருந்தும் பொன்னாவைத் திருநாளுக்கு அனுப்ப மறுக்கிறான். அந்த எண்ணத்தைத் தன்னிடம் முதலில் வெளியிட்ட தாயை, மனைவியின் பெற்றோரை, மைத்துனனைக் ‘கூட்டிக் கொடுப்பவர்கள்’ என்கிறான். இரண்டு வருடம் கழித்து பொன்னாவிடம் காளி சம்மதித்துவிட்டான் என்று நம்பவைத்து அவளைச் சடங்கிற்கு அனுப்பி வைக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக காளி அதை அறிந்துகொள்கிறான். சடங்கில் பொன்னா கரு உறுவாள் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. பிள்ளை பிறக்காவிடினும் ஒரு முறை இன்னொருவனிடம் சென்று வந்தவள்தானே என்ற எண்ணம் எப்போதுமே காளியின் உள்ளத்தில் இருக்காதா? பிள்ளையற்று இருந்த நாட்களைவிட, அது அவளுக்கு இன்னும் மன உளைச்சலையும் கடும் வேதனையையும் அளிக்காதா? எப்படி இத்தனை கொடுமைகள் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்கின்றன? இதனைத் துணிவுடன் பதிவு செய்வது மட்டுமே பெருமாள் முருகனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

இதில் சாதி எங்கிருந்து வருகிறது? எல்லாக் குலப் பெண்களுக்கும் இதுதானே நடக்கிறது? பெருமாள் முருகனுக்குச் சொல்ல மனமிருக்கிறது. துணிவிருக்கிறது.. பெண்கள் மீதான இந்தக் கனிவு, ஒரு பெண்ணுக்குக் கூட இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நாவலை எதிர்ப்பது பெருமாள்முருகனைப் பழிவாங்கும் செயல் அல்ல. பெண்ணின் மீதான கருணையை எதிர்ப்பதற்கு ஒப்பான செயலாகும் அல்லது அந்தக் காருண்யம் பரவி விடக்கூடாதென்ற பதற்றமாகும். இது ஆரோக்கியமானது அல்ல.

செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் எல்லாவற்றிலும் தேர்த் திருவிழாவிற்குக் காத்திருக்கும் கூட்டமென எந்தக் காலமும் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே ஒரு ஸ்கேன் எடுக்க காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரைகூட காத்திருக்கவேண்டி இருக்கின்றது. அதிலும் கூட்டம் அலைமோதும் காரணத்தால் ஒரு பெண்ணிற்கு ஆய்வு நடக்கும்போது இன்னொரு பெண் ஆடைகளை அவிழ்த்து தயார்நிலையில் அதே அறையில் திரை மறைவில் இருக்கவேண்டும். முதல் பெண்ணும் ஆய்வு முடிந்து அரைகுறை ஆடையுடன் திரை மறைவுக்கு வருவாள். சில சமயம் சில ஆய்வுகளைக் கணவனிடம் காட்ட அவன் அழைக்கப்படும்போது அடுத்தவள் திரைமறைவில் ஆடையின்றி நிற்க நேரிடும். ஒரு பெண் இதனை அவமானமாக உணர்ந்தால் அவள் அங்கே சிகிச்சை பெறவியலாது.

மேலை நாடுகளில் ஒரு பல் பிடுங்கினால் கூட அதன் விவரங்கள் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன. மீறினால் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் கடும் தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும் அல்லது பெரும் தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இழப்பீடாகத் தர நேரலாம். ஆனால் நம் நாட்டில் இத்தகைய அந்தரங்கமான சிகிச்சைமுறை யார் கையிலும் சிக்கி எல்லா ரகசியமும் வெளிப்படலாம் என்று தெரிந்தே தம்பதியர் இந்த சிகிச்சைக்கு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, பணம் பிடுங்கி செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் உங்கள் சாதியைச் சேர்ந்த, உங்கள் தோற்ற, சரும அமைப்புக்கு ஒத்துப் போகக்கூடிய கருஉயிரை (Embryo) உங்களுக்குச் செலுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன பிறருடன் உடல் உறவா வைத்துக் கொள்கிறீர்கள் நமக்கென்று நம் வயிற்றில் வரும் பிள்ளையல்லவா என்று Donor Semen Intrauterine insemination செய்கின்றார்கள், இத்தகைய நிறுவனங்களை ஏன் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் எதிர்ப்பது இல்லை?

பொன்னா படும்பாட்டிற்கு இணையான எல்லாத் துயரங்களையும் இக்காலப் பெண்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்வாறு துயரப்படும் பெண்கள் எல்லா ஜாதிகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள் எங்கே சென்றாலும் யார் பார்த்தாலும் ‘நீங்க ஏன் அந்த கோவிலுக்குப் போகக் கூடாது, இந்த மருத்துவரைப் பார்க்கக் கூடாது’ என்ற அறிவுரைகளில் தொடங்கி, விழா விசேஷங்களில் தனிமைப் படுத்தப்பட்டு, அவமானம் செய்யப்பட்டு... பிள்ளையற்ற பெண் நொந்துதான் போகிறாள்.

ஆரம்பக் காலத்திலிருந்தே பெண் என்பவள் உடலளவில் சுகம் பெற்றாளா என்ற கேள்வி யாருக்கும் எழுவது இல்லை. தனக்கு இப்போது பிள்ளை வேண்டும்/வேண்டாம் என்று முடிவெடுக்கும் உரிமை அவளுக்கில்லை. பிள்ளை பெறாதவள் பெண் அல்ல என்ற ஊர்ப் பழிபோக செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் இப்படி எந்த உணர்வுமின்றி, குறைந்தபட்சம் ஒரு முத்தமோ, சிறு தீண்டலோ இல்லாமல், ஒரு மரக்கட்டை போல, ஒரு குழந்தைக்காக செயற்கையாக கருவுருவது எந்தத் தவறுமில்லை என்றால் மாதொருபாகன் எந்த அடிப்படையில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும்? இப்போது சாதிய முகத்தை ஏந்தி வரும் இவ்வமைப்புகளில் இருப்பவர்களில் ஒருவர்கூட செயற்கை கருமையங்களை அணுகியவர் இல்லையா?

மகாபாரதத்தில் அம்பை, அம்பிகை, அம்பாலிக மூவரும் பீஷ்மரின் மனைவியராக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால் விசித்திர வீரியனை அம்பிகையும் அம்பாலிகையும் மணந்தனர். அம்பிகையும் அம்பாலிகையும் பெற்ற பாண்டுவும், திருதராஷ்டிரனும் அவர்தம் கணவர் விசித்திர வீரியன் மூலம் பெற்றவர்களா? மேலும் குந்தியும் மாதரியும் பெற்ற பாண்டுவின் புத்திரர் யாரேனும் பாண்டுவிற்கு பிறந்தவர்களா? இப்போது மாதொருபாகன் நாவலை எரித்து ஆவேசம் காட்டும் அனைவரும் மகாபாரதத்தை விட்டு வைத்திருப்பது ஏன்? மாதொருபாகன் நாவலை ஒட்டி எழுப்பப்பட்ட சர்ச்சை முற்றிலும் சுயநலமும், உள்நோக்கமும் கொண்ட செயலேயன்றி வேறு என்ன? காலச்சுவடு ஏப்ரல், 2016

நன்றி:

ஆசிரியர்:லாவண்யா மனோகரன் (லாவண்யா சுந்தரராஜன்)

மூலம்: காலச்சுவடு (2016-04-01)

ஆசிரியர் குறிப்பு: லாவண்யா சுந்தரராஜன் (பி.1971) கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர். மின்னணுவியலில் உயர் கல்வி பயின்ற இவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியபடியே இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 'சிற்றில்' இலக்கிய அமைப்பு மற்றும் இணையதளத்தை நிறுவி, வாசிப்பு, இலக்கிய உரையாடல், படைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். காயாம்பூ, மாயமலர் ஆகிய நாவல்கள், புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை, அதே ஆற்றில், நீல மிடறு ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் மூலம் சமகாலத் தமிழிலக்கியத்தில் தனித்துவமான படைப்பாளராக அறியப்படுகிறார்.

எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் மாதொருபாகன் நாவல் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், சமூக-அரசியல் எதிர்வினைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை இங்குப் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மாதொருபாகன், ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி ஆகிய மூன்று நாவல்களையும் முன்வைத்து காளி–பொன்னாவின் பிரியம், குழந்தையின்மை, கண்டிஷனல் தொடர்ச்சி மற்றும் மனித மனதின் உளவியல் முரண்களை விரிவாக ஆராய்கிறார் சி. சரவணகார்த்திகேயன்.

ஆசிரியர்: சி. சரவணகார்த்திகேயன்தேதி: 2026-10-09மூலம்: தமிழ் (இணைய இதழ்) (2015)
மாதொருபாகன் Trilogy: பிரியத்தின் துன்பியல்

பெருமாள்முருகனின் மரண சாசனம், கருத்துரிமைக்கு எதிரான சாதிய மதவாத சக்திகளின் தாக்குதல், அமைதிப் பேச்சுவார்த்தையின் பின்னணி மற்றும் ஒரு படைப்பாளியின் மவுனம் குறித்துப் பேசுகிறார் கவிதா முரளிதரன்.

ஆசிரியர்: கவிதா முரளிதரன்தேதி: 2026-09-25மூலம்: இந்தியா டுடே (2015-01-28)
எழுதுகோலின் மரணம்

பெருமாள்முருகன் சர்ச்சை, புலியூர் முருகேசன் மீதான தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளின் பின்னணியில், எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் 'பயந்த தமிழில் எழுதுதல்' என்னும் சமகால நெருக்கடியையும் தன் அனுபவங்களினூடாக அங்கதச் சுவையுடன் விவரிக்கிறார் க.சீ. சிவகுமார்.

ஆசிரியர்: க.சீ. சிவகுமார்தேதி: 2026-09-18மூலம்: அம்ருதா (2015-06-01)
பயந்த தமிழில் எழுதுதல்