“என் நாவல்கள் பற்றிய பரப்புரைகளை உருவாக்குவதில் எப்போதும் நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேரந்திருக்கின்றன. ‘கங்கணம’வெளியாகி முன்றாண்டுகளுக்குப் பின் இப்போது தான் பரவலாகக் கவனம் பெறுகின்றது. எனககு ஒனறும் அவசரம் இல்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலை யில் தான் இருக்கிறேன்”
மாதொருபாகன் நாவலுக்கு எழுதிய தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் பெருமாள் முருகன். அவர் சொன்னபடியே நாவல் வெளிவந்து (2010) ஐந்து ஆண்டுகளுககுப் பிறகு, இதுவரை எந்த நாவலும் பெற்றிராத அளவுக்கு கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது; பரவலாகப் பேசப்பட்டிருக்கிறது; இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பெருமாள் முருகன் எதிர்பார்த்த விதத்திலல்ல, சரியாகச் சொல்வதானால் அதற்கு நேரெதிரான விதத்தில் தான் அது பரவலடைந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதன் முதற் பதிப்பு வெளிவந்தது. அதன் பிறகு 2011இலும் 2012இலுமாக மொத்தம் மூன்று பதிப்புக்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இருந்த போதும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர்தான் இந்நாவல் மீதான கவனம் தீவிரம் பெற்றிருக்கிறது. நாவலைத் தடைசெய்யவேண்டும், தீயிட்டுக் கொழுத்த வேணடும்,ஆசிரியரான பெருமாள் முருகனைத் தண்டிக்க வேண்டும் என்ற எதிர் நிலையான வெறிகொண்ட விதத்தில் இந்தப் பரவலாக்கம் தீவிரம் பெற்றிருக்கிறது. பெருமாள் முருகன், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், அகராதி, பதிப்புக்களின் தொகுப்பாசிரியர் போனற அனைத்துத் துறைகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வரும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர். இதுவரை அவரது இருபத்தேழு நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டின் சாதிய அமைப்பு முறையின் கொடுமையை, கிராமத்தின் அழகும் வாழ்வமைதியும் வெளிப்படும் விதத்தில், கிராம மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் கலையழகோடு தருபவை அவரது புனைவுகள். அவரது நாவல்கள் அவர் ஒரு ஆய்வாளராக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலமைந்த, வரலாற்றின் பக்கங்களைப் பதிவு செய்யும் தன்மை கொணட சிறபபுமிக்க புனைவுகளாக அமைந்துள்ளன.
அந்தவகையில் ஒரு ‘அறுபது எழுபது ஆண்டுகளுக்கு’ முன்பிருந்த தமிழ்நாட்டின் ஒரு பிரதேசத்தின் சமூகவாழ்வு நிலை பற்றிய ஆய்வுரீதியான புரிதலுடன் எழுதப் பட்ட ஒரு நாவல் தான் ‘மாதொருபாகன்’ என்ற சிறு நாவல். இன்று பலத்த சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுதுவதற்கான உரிமைக்கான குரல்களும் ஓங்கியொலிக்கக் காரணமாக அமைந்த இந்த நாவல் பற்றிய ஒரு பார்வையை முன்வைப்பதே இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.
முன்னுரையுடன் சேர்த்து நூற்றித் தொண்ணூறு பக்கங்களில் முடிந்துவிடுகிற ஒரு சிறிய நாவல்தான் இது. ஆயினும் நாவலைக் கையிலெடுப்பவரை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் விதத்தில் ஆட்கொண்டு விடக்கூடிய ஒரு நாவல். காளி, பொன்னாயி என்ற கிராமத்து இளம் கணவனும் மனைவியும் குழந்தைப் பேறின்மை காரணமாகப் படும் அவஸ்தை இந்த நாவலின் மையம். கிராமத்தவர்கள் முன், அவர்கள் சொந்தக்காரரோ, அயலவர்களோ தோட்டத்தில் அல்லது காட்டில் வேலை செய்யவரும் கூலி ஆட்களோ என்ற பேதமின்றி எல்லோர் முன்னாலும் குழந்தை இன்மை என்ற காரணத்திற்காக அவர்களின் குத்தல்கதைகளால் இந்தக் குடும்பம் தலைகுனிய வேண்டி ஏற்படு கின்றது. விடா முயற்சியும் உழைப்பும் இருந்த போதும், பொங்கிவழியும் காதலுடன் அவர்கள் இருவரும் வசதியாக வாழ்ந்தபோதும், குழந்தை இல்லாக குறை அவர்களை ஒவ்வொரு கணமும் வதைத்துக் கொண்டிருக்கிறது. மலடி அல்லது வறடி கூறி நல்ல காரியங்களுக்குச் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்படும் பொன்னாயியினதும், நண்பர்களால் தனது ஆண்மை கேலிக்குள்ளாக்கப்படும் காளியினதும் ஏக்கமும், அதிலிருந்து விடுபட அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் என்று அந்த ஒற்றைக் குடும்பத்தைச் சுற்றி நாவல் விரிகிறது. கதை நிகழும் காலத்து மக்களின் சாதிய உணர்வு; , தீண்டாமையை அவரகள் கடைப்பிடிக்கும் தீவிரம், கிராமத்துக்கென்றேயுரிய சட்ட திட்டங்கள்,நாவலின் கதை நிகழும் ஊரான திருச்செங்கோட்டின் மலைக்கோயில், அங்கு மூலவராகக் குடிகொண்டிருக்கும் அர்த்த நாரீஸ்வரருக்கு எடுக்கப்படும் தேர்த் திருவிழா பற்றிய நம்பிக்கைகள், அதிலும் விசேடமாக, பதினாலாம் நாள் திருவிழா, பாவாத்தா எனற் பெண் தெயவம் குறித்த ஐதீகங்கள் நம்பிக்கைகள் என்று எண்ணிறைந்த பின்னணிகளைத் தம்மகத்தே கொண்ட அந்த மக்களின் வாழக்கையுடன் சேரந்து வாழந்தது போனறு ஒன்றிப்போகும் விதத்தில் வாசகர்களை கட்டிப் போட்டு விடுகிறது நாவல்.
பதினான்காம் நாள் திருவிழா பற்றிய ஐதீகம் இந்த நாவலின் மையப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, தெய்வத்தால் வழங்கப்படும் தீர்வாக நம்பப்படுகிறது. குழந்தைப் பேறற்ற பெண்களுக்கு பதினான்காம் திருவிழாவின்போது, அங்கு சந்திக்கும் ஒரு ஆடவருடன் கூடுதல் மூலமாகக் குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பது காலம் காலமாக இறை நம்பிக்கையுடன் பிணைந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட தீர்வாக நிலவி வந்துள்ளது. அன்றைய தினம் கூடிப் பிறக்கும் குழந் தையை ‘சாமி தநத் பிள்ளை’ எனறு அழைப்பதும், கூடும் ஆணை சாமி என்று ஏற்றுக் கொள்வதும் அந்த கிராமிய ஐதீகமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நம்பிக்கையை மனசார நம்பும் காளியின் அம்மாவும், காளியின் நண்பனும் பொன்னாவின் அண்ணனுமாகிய முத்துவும் இதற்கு இணங்குமாறு காளியையும் பொன்னாவையும் தூண்டுகின்றனர். முதலில் மறுத்த போதும், எத்தனையோ வேண்டுதல்களை நிறைவேற்றியும் குழந்தை இல்லாத குறை தீராததையும், ஊராரின் அவமதிப்புக்களால் சதா பட்டு வரும் அவஸ்தையையும் எண்ணிப்பார்த்து, ‘காளி சரியென்று சொன்னால் தான் தயாரென்று ஒபபுக் கொள்கிறாள் பொன்னா. காளி இதற்கு உடன்படாமல் தன்னுள்ளே ஓராயிரம் கேள்விகளை எழுப்பித் தர்க்கித்து முடிவு காண முடியாதவனாய் திணறுகிறான். இந்த நம்பிக்கை பொய் என்று அல்லது இது ஒரு மூட நம்பிக்கை என்று அவனும் சரி, அவளும் சரி நினைக்காவிட்டாலும், அதற்கு ஒப்புதல் அளிக்க, பொன்னாவைப் போல அவனால் முடியவில்லை. பொன்னா மீது அவன் கொண்டுள்ள கட்டுக்கடங்காக் காதல் அவனுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறதே ஒழிய ஒப்புக் கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை இதற்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முகமாக காளியின் தாயார் கூறும் வார்த்தைகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
“திரசங்கோட்டு செங்கோட்டையாள் பாவாத்தா இந்த மனுசங்க பொழைக்கிறதுக்கு எத்த னையோ வழி வெச்சிருக்காங்க. கொடியேற்றம் தொடங்குறதுல இருந்து, சாமி கீழே வந்து மேலே போற வரைக்கும் எத்தன சனத்துக்கு என்னென்ன செய்யுது இந்தச் சாமிங்க. எங்கப்பமூட்டு வைராவுக்குத் தேரிழுக்கிற உரிமை இருக்குது; சாமி தூக்கிற உரிமை இருக்குது. இன்றைக்கு வரைக்கும் செஞ்சிக்கிட்டுத்தான் வர்றாங்க. அங்க பொறந்து வளந்தவ நான். எனக்கு ஒரு வழி காட்டாமல் உட்ருவாங்களா? திருநா தொடங்கிறதுல இருந்து முடியற வெரைக்கும் நாங்கெல்லாம் அங்க வீதியில தான் சுத்திக்கிட்டுக் கெடப்பம். மலையில இருந்து சாமி கீழ வர்ற நாலாந் திருநாவும் மறுபடியும் மலைக்கு சாமி மேலே போற பதினாலாம் திருநாவும் அந்தளவு முக்கியம். ஆனா நான் பெரிய பொண்ணு ஆனதிலிருந்து பதினாலாந் திருநாவுக்கு போனதில்ல. ஊட்ல அனுபப் மாட்டாங்க. உனக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சும் தெரியாம எத்தனயோ வருசம் நீ போயிருக்கிற. இந்த வருசம் பொன்னாளை அதுக்கு அனுப்போணும் அதுக்கு நீ ஒத்துக்கோணும்..”
“உலகத்துல ஆருக்குத்தான் குறை இல்ல? எல்லாருக்குந் தான் ஏதாச்சும் ஒரு கொறைய இந்தச் சாமி வெச்சிருக்குது. அதைப் போக்கிறதுக்கு வழியையும் அதே சாமி வெச்சுத்தான் இருக்குது. கொறைன்னு வந்தாச்சு. அதுக்கு ஒரு வழி இருக்குது. அதையுந்தான் பாப்பமே. உம் மனசு ஒத்துக்கிட்டா எல்லாஞ் சரியாப்போவும். எத்தனையோ பொம்பளைங்க அப்பிடி இப்பிடி இருக்கிறாங்க. ஆருக்கு தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காம போறாங்க. எதையும் மறப்பா செஞ்சா தப்பில்லையிங்றாங்க. இதுவும் அப்பிடி மறப்புத்தான். ஆனா உனக்குத் தெரிஞ்சு நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழைக்கிறவன் நீ… “
“பதினாலாந் திருநா அன்னைக்கு திரசங்கோட்டுல காலடி எடுத்துவைக்கிற ஆம்பளைஙக் எல்லாரும் சாமிதான்,கொடுக்கிறது சாமி தான். சாமியை நினைச்சுட்டா பிரச்சினை ஒன்றுமில்லை. எந்தச்சாமி எந்த மூஞ்சியோட வரும்னு யாருக்குத் தெரியும். மூஞ்சி தெரியாம கொடுத்துட்டுப் போறது தான் சாமி. நீ சொல்லு. இந்த வருசமே போய்ரலாம். நம்மூர்ல இருந்து வேண்டாம். இங்கேயே இருந்தாலும் செரி, மாமனார் ஊட்ல இருந்தாலும் செரி... நல்லா யோசிச்சுச் சொல்லு உங்கைல தான் நம்ம பொழைப்பே இருக்குதுடா சாமி…”
இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. வாழ்வில் பிள்ளையில்லாக் குறையை நிவர்த்திக்க நடைமுறையில் இருந்து வந்த ஒரு ஒழுங்குமுறை. ஆனால் காளிக்கு அது முடியவில்லை. தாயினதும் முத்துவினதும் தூண்டுதலுக்கு தலையாட்டுகிறான். முதலிலே திருவிழாவுக்கே போவதில்லை என்று இருந்தவன் பின் அவர்களின் தூண்டுதலினால் திருவிழாவுககுப் போக சம்மதிக்கிறான். இந்தச் சம்மதம் பொன்னாளாலும் முத்துவாலும் பதினாலாம் திருவிழாவுக்கு போக அனுமதித்ததாக அர்த்தப் படுத்தப்படுகிறது.
பதின்நாலாம் திருவிழாவன்று முத்துவின் வீட்டிலிருந்து பொன்னாளின் தகப்பனாரும் பொன்னா வின் தாயும் அவளை வண்டியில் திருவிழாவுக்குக் கூட்டிக் கொண்டு போகின்றனர். அதற்கு முன்பாக காளியை முத்து ஒரு ஒரு புது இடத்துக்கு அழைத்துச் சொன்றான். தென்னந் தோப்பொன்றில் வேலை செயயும் மரமேறும் மண்டையனும் அவனது மனைவி காத்தாயியும் குடியிருக்கும் குடிசை அது. அந்தக் குடும்பம் ஏற்கனவே காளிக்கும் தெரிந்த குடும்பந்தான். இரவு முழுவதும் குடியும் பேச்சுமாகக் கழிகிறது. தகப்பனுடனும் தாயுடனும் திருவிழாவுக்கு சென்ற பொன்னா, காளி தன்னை போக அனுமதித்தான் என்ற நம்பிக்கையுடனும் எப்படியும் ஒரு சாமியை, தனக்குரிய சாமியை இன்று அடைந்து விடுவேன் என்ற எதிர்பார்ப்புடனும் திருவிழாவுக்குப் போகிறாள். அவளுடன் திருவிழா நடக்கும் வீதிகளில் நடந்து வந்த தாய் வேண்டுமென்றே அவளை ஓரிடத்தில் தனியாக விட்டுவிட்டு ஒதுங்கிவிடுகிறாள். பொன்னாளுக்குரிய ‘சாமி’ அவளைக் கண்டு கொள்கிறது. அல்லது அவள் தனக்குரிய சாமியைக் கண்டு கொள்கிறாள்.
இரவு போதை தெளிந்து எழுந்த காளி மனைவியின் நினைப்பு வர அதிகாலையிலேயே தூக்கத்திலிருக்கும் முத்துவை எழுப்பாமல் புப்பட்டு மாமனார் வீட்டுக்கு (முத்துவின் வீடு) வருகிறான். முன்தினம் அவனுடன் புறப்படு முன்பாக, பொன்னாயியிடம் தனியாக சொல்லிவரப் போன முத்து. இப்படிச் சொல்லியிருந்தான் “நாங்கள் ரண்டு பேரும் இருந்துக்கிறம். நீ போயிட்டு வா பொன்னா. அந்தச் சாமியை நல்லா நெனச்சுக்க”. பொன்னா முத்துவுடன் புறப்படத் தயாராயிருந்த காளியைப் பார்த்தாள். அவன் அனுமதித்தானா எனற் கேள்வியுடன். அவன், வழமையான அவனது ‘அந்த மயக்கச் சிரிப்போடு புருவங்களை மேலேற்றிப் பார்த்து விடைபெற்றான்’. அவனது அந்தப் பார்வையைப் பொன்னா தனக்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறாள். ஆனால் காளி...அவளது பார்வையை ‘தனக்கான அழைப்பாக நினைக்கிறான். மணமான நாளிலிருந்து இணைபிரியாத சோடிகளாகக் காதலில் திளைத்திருந்த அவர்களது பரிபாசைகளில் இந்தப் பார்வையும் ஒன்று. முத்துவுடன் வராமல் இருந்திருந்தால் அவளுடன் முயங்கியிருக்க முடிந்திருக்கும் என்ற விரகத்துடன் அவன் வேகமாக நடந்து வருகிறான். மாமனார் வீட்டிற்கு வந்ததும் அவனது உள்ளம் பதைக்கிறது. வீடு பூட்டப்படடிருக்கிறது. அவனுக்குப் புரிந்துவிட்டது. பொன்னாள் திருவிழாவுக்குப் போய்விட்டாள். இது அவனை மாபெருந் துயருக்குள் தள்ளுகிறது. பித்துப் பிடித்தவன் போல அவளை ஏசுகிறான். தன்னையே நொந்து கொண்டு; அரற்றுகிறான், “ஏமாத்திட்டியேடி தேவடியா முண்ட” என்று அலறுகிறான். நாவல் இவ்விடத்தில் முடிவுறுகிறது.
நெஞ்சைத் தொடும் அழகான காதல் கதை.செட்டான மொழி, மனதைப்பிழியும் ‘குழந்தையற்ற’ நிலை காரணமான அவஸ்தையின் தவிப்பு. நாவல் இந்தக் கதையிலும் அன்றைய சமுகம் பற்றிய ஒரு அருமையான சித்தரிப்பை முன்வைத்து நிறைவு கொண்டிருக்கிறது. இதில் வரும் பாத்திரங்கள், அவர்களின் நடவடிக்கைகள், அவர்களது உரையாடல்கள் எல்லாம் எந்தப் போலித்தனங்களுமற்ற வெளிப்படையான கிராமத்துமக்களின் எளிமையான வெளிப்பாடுகள். பூடகமான, குத்தல்த் தனமான உரையாடல்களும் கூட இயல்பான உயிர்ப்புமிக்க உரையாடல்கள். எளிமையான கிராமத்து மக்கள் மட்டுமே பேசக்கூடிய வார்த்தைகள். பொன்னாவின் ‘சாமி’ அவளுக்குப் ‘பிள்ளை வரம்’ தருமா? காளி அவளை ஏற்றுக் கொள்வானா? பெண்ணை வேறொரு ஆணுடன் உறவுகொள்ள அனுப்பிவைப்பது சரியா? இது கோவிலுடனும் திருவிழாவுடனும் இணைக்கப்படுவது சமய நம்பிக்கைகளையும் பெண்களையும், அந்தக் கிராமத்தையும் இழிவுபடுத்துவதா என்பது பற்றிய எந்தச் சர்ச்சைக்குள்ளும் நாவல் போகவில்லை. அறுபது எழுபது வருடத்துக்கு முந்திய சமூகச் சூழலில் இந்தக் கேள்விகள் எழுவதற்கான வாய்ப்பே இல்லாதளவுக்கு நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றி இருந்திருக்கின்றன என்ற அளவுக்குமேல், நாவல் வேறெதையும் சொல்ல முற்படவில்லை. நாவலின் நோக்கமும் கூட அதுவல்ல. நாவல் சித்தரிக்கும் நம்பிக்கைகளும் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்த ஒரு கிராமத்தில் நடக்கும் ஒரு குடும்பத்தின் கதை என்ற அளவில் இதை விளங்கிக் கொள்ளும் எவருக்கும் இதில் எந்த முரண்பாட்டையும் காணமுடியாது. மாறாக ஒரு கிராமத்தின் நம்பிக்கைககளும, நிலவிய பண்பாட்டு அம்சங்களும் எவ்வாறு அந்த மக்களின் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றி அவர்களை அமைதிப்படுத்தி வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பெருமாள் முருகன் அர்த்தநாரீஸ்வரரான சிவனையும் மலைக்கோயில் திருவிழாவையும், பெண்களையும் கொச்சைப்படுத்துவ தாகப் பேசப்படும் கதைகளுக்கும் நாவலுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நாவலை ஒரு வரலாற்று ஆய்வு அறிக்கையாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஒரு அறிக்கையாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. புனைவுகள் மனித வாழ்வின் எல்லாப் பக்கங்ககள் குறித்ததும்,கிடைககும் அல்லது காணும் சம்பவங்களை அடியாகக்கொண்டும் பரந்து விரிந்து வளரக் கூடியவை. படைப்பாளியின் சுதந்திரமான கற்பனைக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவை புதிய வடிவம் எடுக்கின்றன. வாசகமனதில் அது ஏற்படுத்தும் அனுபவச் செறிவின் தாக்கம், புதிய பார்வைகளுக்கான வழிகளை திறந்து விடுகிறது. இதுவே ஒரு நாவலில் ஒரு வாசகர் எதிர்பார்ப்பது. அதை இந்த நாவல் தன் அளவுக்கேற்ற விதத்தில் சிறப்பாகச் செய்துள்ளது.
‘பெருமாள் முருகன் என்ற படைப்பாளி இறந்துவிட்டான்’, என்று பெருமாள் முருகன் அறிவித்திருக்கின்றார். அவருக்கெதிராகக் கிளம்பிய எதிர்ப்பும், அதிகாரத்தின் அச்சுறுத்தலும் அவரை அப்படி அறிவிக்க வைத்திருக்கிறது. அது மிகவும் துயர்தருவது. ஆனால் பெருமாள் முருகன் என்ற படைப்பாளியையோ அவரது படைப்புக்களையோ அவரே விரும்பினாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு பதிவு செய்யும், அதில் சந்தேகமில்லை!
