நிறுவனத்துள் சுருங்கும் ஆணும் நெகிழ்வில் விரியும் பெண்ணும்

ஆசிரியர்: இரா.கந்தசாமிதேதி: 2026-05-08மூலம்: கோவை ‘இலக்கியச் சந்திப்பு’ 17ஆம் நிகழ்வில் 30.04.2012 அன்று வாசிக்கப்பட்டு, பறை-2015 தொகை நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை (2012-04-30)
நிறுவனத்துள் சுருங்கும் ஆணும்  நெகிழ்வில் விரியும் பெண்ணும்

மாந்த வாழ்வு என்பது, மண்ணின் பண்பாட்டு மரபு சார்ந்து பல்வேறு தேவைகளை உள்ளடக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. தோராயமாகப் பிறப்பு, இறப்பு எனும் இவற்றுள் உள்ளடங்கும் மாந்த வாழ்வின் படிநிலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான தேவைகள் உண்டு. அவ்வகையில் மாந்த வாழ்வினது உயிரியக்கமே சமூகத் தேவைகள், அது சார்ந்த நம்பிக்கைகளுக்கு இடையே ஆன ஊடாட்டத்தில்தான் அடங்கியுள்ளது.

குடும்பம், சமூகம், சொத்துடைமை எனும் களங்களில், சமூகத்தின் தேவைகள் தனிமனித இருப்புசார் (சமூக) விழுமியங்களை உற்பத்திசெய்து கொண்டிருக்கின்றன. இந்த விழுமியங்கள் கட்டுறுதி கொண்ட சட்டதிட்டங்களாய் இறுகிச் சமைத்திருக்கின்றன.

இந்தச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, சமூகத் தேவைகளை நிறைவேற்றி, சமூக விழுமியங்களைக் காப்பாற்றித் தருவதே ஒவ்வொரு தனிமனித வாழ்வினுடைய கடமையாகிறது. இந்த ஒழுங்குக்குள் வராத எதுவும், சமூகத் தேவைகளை நிறைவேற்றித் தரமுடியாத எதுவும் சமூகம் என்னும் நிறுவனத்தின் அலகுகளால் புறத்தள்ளப்படும்.

அவ்வகையில் தேவையை / தேவைகளை நிறைவேற்றித் தரமுடியாத ஒரு தனிமனித அகம் கடுமையான பதற்றத்திற்கும் சிதைவுக்கும் உள்ளாகிறது. இதனால் ஒரு தனிமனித அகத்தில் தான் x சமூகம் எனும் முரண்களம் உருவாகிறது. இதனால் அத்தனிமனித இருப்பு என்பது தான் சார்ந்த சமூகத்தின் அறச்சார்புகளின் மீது ஓர் உடைப்பை எதிர்கொள்ள, முரண், விலகல் என்று அந்நியப்பட்டுவிட நேர்கிறது. அல்லது இத்தேவைகளின் மீது கட்டப்பட்டுள்ள விழுமியங்களைத் தாண்டித் தன் உள்ளார்ந்த நனவிலித் தேவைகளின் பெருவெடிப்பாய் - சுய விடுதலை உணர்ச்சியின் பெருவெடிப்பாய்த் தன்னை மீள்வடிவு செய்துகொள்கிறது.

சமூக விழுமியங்களுக்கும் தனிமனித இருப்புநிலைகளுக்கும் இடையேயான இந்த ஊடாட்டத்தின் மீது மையங்கொள்ளுகிற, பெருமாள் முருகனின் படைப்புக் களத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று (அவருடைய படைப்பு மொழி எளியதுதான் என்றாலும்). கொங்கு வட்டாரத் திருச்செங்கோட்டின் பக்கத்துப் பக்கத்து இரு கிராமங்களின் (ஆனங்கூர், கீழேரிபட்டி) இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்ந்த திருமண உறவின், அடுத்தக்கட்டத் தேவையான ‘குழந்தைப் பேறின்மை’ என்பதிலிருந்து கிளைவிரிக்கிறது ‘மாதொருபாகன்’ நாவல்.

ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தையதாகச் சுட்டப்பெறும் காலவெளிக்குள் திருச்செங்கோட்டைச் சுற்றியுள்ள கொங்கு மண்ணின் மக்கள் வாழ்வை, மலை, மரஞ்செடிகள், பிற உயிர்களின் வாழ்வைப் பேசும் மாதொருபாகன் பெருமாள் முருகனின் ஐந்தாவது நாவல்.

சமூகத் தேவைகளுக்கும் மனித வாழ்வின் ஆதாரத்திற்குமான முரண்களத்தைச் சுற்றி, அச்சுழற்சிக்குள் மண்பரப்பின் மீது இயங்குகிற காலகால அழுத்தங்களும், மனித வாழ்வின் நுண்ணிய, பாரிய அனுபவங்களும், வாழ்வுக்கும் வாழ்சார் நிலத்துக்குமான உறவுகளும், மனிதருக்கும் அவர்தம் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகளும் காட்சி ஊடகமாய் விரிகின்றன மாதொருபாகனில்.

முரண்பாடுகளும் விடுவிக்க முடியாத சிண்டு சிடுக்குகளும் உள்ள இவ்வியக்கத்தில் மனித உறவுகள் தத்தமக்குள் சமைத்துக்கொள்கிற அதிகார அடையாளங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதில் பெருமாள் முருகன் சாதிக்கிறார். காளியண்ணன், பொன்னாள் தம்பதியர்க்கு மணமாகிப் பத்தாண்டுகள் கழித்தும் குழந்தை இல்லை. இந்தக் ‘குழந்தைப் பேறின்மை’ ஏற்படுத்தும் வேதனைகள் பலப்பல. குழந்தைப் பேறின்மைக்குக் கூறப்படும் காரணங்கள் தினுசுதினுசானவை. இவை குறித்த பலபடித்தான விசாரணைகளாக விரியும் நாவலின் ஊடாகக் கொங்குவட்டார நாட்டார் வாழக்காற்றுக் கூறுகள் அவ்வளவு நுட்பமாய்த் தம்மை வெளிபடுத்திக் கொள்கின்றன.

சமூகம், குடும்பம், உறவுகள், மனித வாழ்வுக்கான எத்தனிப்புகளாக எழும்பும் மனித முகங்களின் குரூரங்கள், குடும்பம் தன்னுள் புதைத்துவைத்திருந்து, தேவைக்கேற்ப வெளிப்படுத்தும் வன்மம், இவற்றுக்கிடையிலாகப் போராடிப் போராடித் தன்னைத் தகவமைத்தும் சூழ்நிலையின் இறுக்கத்தை எதிர்கொண்டும் அந்நியப்பட்டு வாழ்கிற தனிமனிதத் தன்னிலைகளின் ஊடாக மாதொருபாகன் சுழல்கிறது.

இனவரைவியல் ஆய்வுத் தரவுகளின் துணை பெற்றும் படைக்கப்பெற்ற இந்நாவலில், நல்லுப்பையன் சித்தப்பா, வெள்ளைக்காரத் துரை வைத்த போட்டில் வென்ற காளியண்ணனின் தாத்தா, கள்ளிறக்கும் தம்பதியர் மண்டையன், காத்தாயி என்று எல்லாப் பாத்திரங்களும் ஆழ்ந்த சமூக வாசிப்பின் விளைச்சல்களாய்ப் படைப்பில் ஊடுபாவாய் விரவி நாவலின் வட்டாரத் தன்மைக்கும் காளியண்ணன், பொன்னாள் தம்பதி வழியாக வெளிப்படுத்தப்படும் கதைக் கருவின் புதிர்வட்டச் சுழல்வுகளுக்கும் பயன்பட்டிருகின்றன.

அதைப் போலத் திருச்செங்கோட்டு மலைத் தெய்வங்கள் பற்றிய மக்கள் நம்பிக்கைகள், அத்தெய்வங்களின் தோற்றத் தொன்மங்கள், வழிபாட்டு முறைமைகள் ஆகியவையும் கொங்கு வட்டார விவசாயக் களத்தின் சித்திரிப்புகளும் நாவலைக் கனப்படுத்துகின்றன.

நகர்த்தித் தள்ளிக்கொள்ள முடியாத இப்பெருவாழ்வின் முன் எவருமே குற்றத்திற்குரியவர் அல்லர்; அல்லது எல்லோருமே குற்றத்திற்குரியவர்கள்தாம்.

‘வறடி’ என்று பெயரெடுப்பதால், எவ்வளவு நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற - குடும்பத்தைத் தன் உழைப்பாலும், தியாகத்தாலும் விரும்பித் தாங்கிக்கொள்கிற ஒருத்தி, ஒதுக்கப்படவும் அவமானங்களால் பின்னப்பட்டுப் போகவும்தான் நேர்கிறது. குடும்பத்தில் ‘வாரிசு இன்மை’ என்பது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் சாபமாகிறது. சாபக் கழிவுக்காகக் கோயில் கோயிலாகச் சுற்றுதலும் உயிரைப் பணயம் வைத்தலும், பணத்தை பணமென்று பாராமல் செலவழித்தலும் என, வாழ்வு பரிகாரங்களால் நிரம்புகிறது. ‘மூன்று மொட்டை, மூன்று பொங்கல்’ என்னும் வேண்டுதலில் தொனிக்கும் அந்தராத்மாவின் குழந்தை வரம் வேண்டும் ஆவலாதி கண்ணீருக்குமாகிறது.

எப்படியும் வயிறு ஒரு குழந்தையைத் தரித்துச் சுமந்து தள்ளிவிட எத்தனை எத்தனையோ தழை மருந்துகளைக் குடித்துப் பார்க்கிறது. மருந்துகளோடு தெய்வத் துணையும் தேவைப்பட எல்லாப் பொழுதிலும் எல்லா நிகழ்வுகளும் நம்பிக்கைகளோடும் சடங்குகளோடும் உறவு கொண்டவையாகின்றன.

சடங்குகளில்தான் எவ்வளவு தொன்மங்கள் புதைந்து கிடக்கின்றன! எல்லா நம்பிக்கைகளுக்குள்ளும் தொன்மங்களுக்குள்ளும் இருந்து விரட்டுகிற சாபம் கணவன், மனைவி, குடும்பம் என்று எல்லாரையும் அலைக்கழித்து வதைக்கிறது. இன்மைக்கு இதுதான் காரணமோ, அது காரணமோ என்று அல்லல்பட வைக்கிறது.

நிலத்திற்கு, சொத்திற்குச் சொந்தம் கொண்டாட ஒரு வாரிசைத் தரமுடியாத பெண், இந்த ஆணரசியல் சமுதாயத்தில் தீண்டப்படாதவளாகத்தான் மாறிப்போகிறாள். அவ்வளவு அவமதிப்புகள், ஏளனங்கள். அவள் வாய் திறந்து மனம் மலர ஒரு வார்த்தையைச் சொல்லிவிட முடியாது; அறிவுரையாகக் கூடத் தப்பித்தவறி ஒன்றைச் சொல்லிவிட முடியாது; அவளுடைய எல்லாச் செயல்களும் சமூகத்தின் முன் அவளை ஒரு குற்றவாளியாகவே முன்னிறுத்திக் குத்திப் பேசப்படும்.

அவள் பருப்பள்ளிக் கொடுத்தால் நிலம் விளையாது; அவள் சடங்கு சுற்றினால் உரிய பெண் வளம் பெறமாட்டாள். குழந்தையற்றவள் கூட்டத்தில் கலக்க முடியாதவள்; தனிமைப் படுத்தப்படுபவள்.

வாரிசு அற்ற ஆணின் ஆண்மையின் குறைபாட்டை முன்வைத்துப் பெண்ணின் உடல்மேல் ஆசைவைக்கும் ஆணுலகு; பெற்றெடுக்காத பெண்ணைக் காரணங்காட்டி ஆணுக்கு மறுமணம் செய்து பார்த்துவிடத் துடிக்கும் குடும்பம்; சாடைப் பேச்சாலும் கெக்கலிகளாலும் ஆணை உசுப்பிவிட்டுப் பெண்ணை மறுகச் செய்யும் வன்ம உலகம் என்று குழந்தை இன்மை எனும் புள்ளியிலிருந்து விரிகிற படைப்புச் செயல்பாடு வெகுநுட்பம் கொண்டதாக உள்ளது.

இப்படி, குழந்தைப் பேறு என்னும் தேவை, குழந்தை இன்மை என்னும் குறைபாட்டால் ஒரு தம்பதியை, ஆணை, பெண்ணை, ஒரு குடும்ப இயக்கத்தை மறுத்து ஒதுக்குகிறது.

குழந்தைக்குத் தகப்பனாக ஆணின் ஆண்மை கேள்விக்கு உள்ளாதல் என்னும் நிலையில், ஆணின் அகமும் சிதைக்கப்படுகிறது. காளியண்ணன் தொண்டுப்பட்டி உண்டு; தன் வீடுண்டு என்று ஒதுக்கிப் போய்விட வேண்டியுள்ளது. அவனுடைய ஆண் பெருமிதம், வீரியம் எல்லாம் அந்த ஒரு பழியில் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்டு விடுகின்றன.

இது ஆண், பெண் இருவரிடையேயும் பெரும் பதற்றமாக மாறுவதற்குக் காரணம் ஒன்றுண்டு. அது அவர்களுக்கு இடையே உள்ள மண உறவின்மீது கட்டமைந்த அன்பும் அதன் உறுதியும் ஆகும். திருமணம் என்னும் ஆண், பெண் சமூக உறவு, அது கட்டமைத்துத் தரும் கட்டுறுதிமிக்க அன்பு, அந்த அன்பின் அடிப்படையிலான குடும்பப் பற்றுதல், காமம், இல்லறத்தின் அணுக்கம் என்பவை சமூக விதிமைகளுக்குப் பதில் சொல்லத் தவிக்கின்றன; சொல்ல முடியாது கதறுகின்றன.

இங்கு இந்த இல்லறத்தில் ஓட்டை இருந்திருக்குமென்றால் நாவல் குறிப்பிடுவதைப் போலப் பெண் வேறு ஆண் மூலமாகத் தயாகித் தன்னைச் சமூகத்தின் முன் நிலைநிறுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவனோ அவளோ அவ்வுறவின் கட்டினை மீறுபவர்கள் அல்லர்.

அதுதான் அவர்களைச் சமூகத்தின் எல்லா வகையான வசையாடல்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கவைக்கக் காரணமாகிறது; திருவிழாக் கூட்டத்தில் சாடைப்பேச்சால் அவமானமுறும்போது, ஆண் சிரித்து மழுப்பிவிட்டுச் செல்லக் காரணமாகிறது. அல்லது கோபமுற்றுத் தன்னைத் தற்காத்துக்கொள்ள எதிராளியை எதிராளியின் வழியிலேயே வீழ்த்த முனைகிறது. வெதும்பி வெதும்பிச் சேர்ந்து பின், ‘குழந்தையே வேண்டாம்!’ எனவும் முடிவெடுக்க வைக்கிறது; குழந்தையற்ற கணவன், மனைவியர்க்கு ஒருவருக்கொருவரே குழந்தையாவோம் என அமைதிகொள்ள வைக்கிறது. என்றாலும் இந்தச் சமூக நிறுவனத்துக்குள்ளான விழுமியங்கள், தேவைகளால் கட்டுண்ட மனத்திற்குள்ளாக, கணவன், மனைவி இருவருக்குமே ‘குழந்தை வரம்’ ஓர் ஏக்கமாக, உயிர்த் துடிப்பின் வலியாக நிலைகொண்டுதான் இருக்கிறது.

தான் நட்ட செடி முளைக்கிறது; தான் வளர்த்த கன்று ஈனுகிறது. ஆனால் தனக்கொரு பிள்ளை இல்லையே என அவளை மருகவைக்கிறது. இந்த மருகலும், ஊரார் தரும் அவமானங்களும் வெவ்வேறு நிலைகளில் அவளுக்குள் இருப்புசார் வேறுபடுத்தலை நிகழ்த்துகின்றன.

ஆணுக்குத் தொண்டுப்பட்டியும், பெண்ணுக்கு வீடும் கதியாகிப் போகின்றன. வலிகளைத் துடைத்தெறிகிற காமம்கூட நாளாவட்டத்தில் சுரத்தின்றிப் போகிறது. சமூகம் எவற்றையெல்லாம் ஒதுக்குகிறதோ அவற்றை மட்டுமே தனக்குத் துணையாக்கிக் கொண்டு தேற்றிக்கொள்கிற ஓர் அகம் ஆண், பெண் இருவருக்குமே உருவாகிவிடுகிறது. இதன் காரணமாகத்தான், ஊருக்கு அடங்காத, முரட்டுச் சுபாவம் கொண்ட, ‘மணம் செய்து கொள்ளாத’ நல்லுப்பையன் சித்தப்பா காளிக்கும் பொன்னிக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.

சமூகம், ஊர், குடும்பம், உறவுகள், கணவன், மனைவி, குழந்தைகள் என்று மிக நுணுக்கமான படித்தரங்களுக்குள்ளாகச் சமூகம் தன் விதிகளை ஒருவகை ஒழுங்குமுறையோடுதான் கட்டமைத்து வைத்திருக்கிறது. இந்த வலைப்பின்னலின் நுட்பம்தான் குடும்ப கௌரவம், வாரிசு, சொத்து என்றெல்லாம் பேசச் செய்கிறது. குழந்தைப் பேறு என்னும் தேவை இவற்றுக்கு இடையேயெல்லாம் ஊடாடி.. ஊடாடி அலைகிறது.

‘சாவு வீட்டுக்குப் போய் வந்தால் குளிக்க வேண்டும். இது ஒரு விதி. யாரையும் தொடாமல் எட்டிநின்று பார்த்துவிட்டுத் தலையில் கழுநீரைத் தெளித்துக்கொண்டால் குளித்தது போலத்தான். இப்பொழுது குளித்து உடையை ஈரமாக்கிக்கொள்ளத் தேவையில்லை’.

இப்படி, முடியாத நிலையில் வேறு பொய் உபாயங்களைத் தயாரித்து விதிமீறலில் இருந்து தப்பிக்கொள்கிற நுணுக்கத்தையும் இந்த மக்கள் கூட்டம் தன் வசதிகேற்பச் சிலபல கற்பிதங்களின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.

இத்தகைய ‘கற்பிதங்கள்’ மூலமாகத் ‘தப்பித்தல்’ என்பது சமூகத்துக்கும் அதன் அடிப்படை அலகான மனிதர்களுக்கும் இடையேயான நுணுக்கமான ஓர் ஒப்பந்தம் ஆகும். சமூக விதியை ஒரு வசதியின் பொருட்டு மீறினாலும், மீறலில்லை என்பதற்கு மேலே குறித்ததைப் போல மக்கள் வழக்காற்றில் சிலபல சான்றுகளைச் சொல்லலாம்.

ஆனால் ஊர் மானம், குடும்ப மானம், தனிமனித ஒழுக்கம் என்னும் இவற்றின்மீது கட்டமைகிற ஒரு சமூகம் குழந்தை இன்மைக்குத் தருகிற ஓர் இறுதி வாய்ப்பு என்னவாக இருக்கமுடியும்? இதற்கு, பெருமாள் முருகன் திருச்செங்கோட்டின் வழக்காறுகள் பலவற்றை ஆராய்ந்து அறிந்ததன் மூலமாக, பல ஆண்டுகள் பினனோக்கிச் சென்று, ஓர் உண்மையைக் கண்டறிந்து, அதை, வியப்பும் அளிக்கக்கூடிய முடிச்சாக்கிக் காட்டி விடையைத் தருகிறார்.

திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழாவின் பதினான்காம் நாள் திருவிழா குழந்தையின்மையைப் போக்கிக்கொள்வதற்கான இறுதிப் புகலிடமாக, குழந்தையற்றவர்களுக்குத் திகழ்கிறது. தெய்வங்கள் சமூகத் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்குரிய வேண்டுதல்களுக்காக மட்டுமல்லை.

நாட்டுப்புறத் தெய்வங்கள், தெய்வbநம்பிக்கைகள் என்பவை சமூகத்தின் தேவைகளுக்குத் தோதாகத் தம்மை இளக்கிக் கொள்ளவும், உருமாற்றிப் பிசைந்து வனைந்து கொள்ளவும் செய்கின்றன.

திருவிழாவின் குறிக்கத்தக்க நாளொன்றில் குழந்தையற்ற பெண்களுக்குக் குழந்தை வரம் தரும் சாமிகளாக, திருச்செங்கோட்டு மலையின் தெய்வம் செங்கோட்டையனாக மாறி, அப்பகுதி ஆடவர்கள் குழந்தை வரம் தருதல் என்பதை ஆழ்ந்து நோக்கினால் அது அதிர்வுக்கும் வியப்புக்கும் உரிய ஒன்றில்லை என்பதைச் சமூக விதிமைகளின் இயங்கியல் தன்மைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

சொத்துக்கு உரிய ஆண் வாரிசின் தேவை என்னும் சமூகக் களத்தின் நெருக்குதல், தெய்வம், சடங்கு, நம்பிக்கைகளைக் காரணம் காட்டி அழுத்தமான நெகிழ்வுகள் சிலவற்றை உருவாக்கிவிடுகிறது. அந்த நெகிழ்வு, அறத்திற்குச் சார்பானதாக, தவறுகள் அற்றதாக, குழந்தை வரம் தருபவருக்கும் அதைப் பெறுபவருக்கும் எவ்வகைக் குறுகுறுப்பும் உளைச்சலும் ஏற்படாதவாறாக அமைவதற்குக் காரணமே, அது தெய்வத்தின் செயல் என்று கட்டமைக்கப்படுவதுதான்.

இதனால்தான் பொன்னாள் குழந்தைப் பேற்று வரத்தைப் பெறப் பதினான்காம் நாள் திருவிழாவுக்கு அவளைத் தயார்ப்படுத்துகிறார்கள்.

கட்டுறுதிமிக்க சமூக வரையறைகளின் நெகிழ்வுகள், மீறல்கள், இதுகாறும் ஒடுங்கிக் கிடக்கும் தனிமனித இருப்புகளையும் விடுதலை செய்துவிடுகின்றன. ஒடுங்கிக் கிடக்கும் மனிதத் தன்னிலைகள் இத்தகைய நெகிழ்வுகளைத் தம் நனவிலி அகத்தின் மிக உள்ளார்ந்த நிலையில் வரவேற்கின்றன.

கட்டப்பட்டுக் கிடக்கும் காலகாலக் கயிறுகளைப் பட்டுப்பட்டென்று தெறித்து அறுத்துக்கொள்ள வாய்ப்பாகச் சமூக விதிமைகளின் நெகிழ்வுகள் பயன்பட்டுவிடுகின்றன. அதனால் சமூகத்தின் எந்த அலகாலும், தான் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம் என உணரும் ஓர் அகம். தக்க நேரம், சுழல் வாய்க்கும் பொழுது, அது, அந்த ஒடுக்கத்திலிருந்து விடுபட்டுக்கொள்கிறது. வேகமாக, குறிப்பாகப் பெண்ணுலகு.

ஏதோ ஒரு வலுத்த காரணம் பற்றிச் சமூக நிறுவனம், சடங்கின் பெயராலோ தெய்வத்தின் பெயராலோ தன்னுடைய கட்டினைத் தளர்த்தும் பொழுது, பெண் தன் விடுதலையைத் தன் ஆன்ம நிலையில் உணரத் தொடங்குகிறாள். இதுகாறும் வீட்டில், வயலில், உறவுகளில் முடங்கிய சுயமற்ற பெண்ணாக இருப்பதில்லை அவள் இப்போது.

அவள் புதிதாகப் பூத்த சிறுமியாக - புதியவளாக மாறிவிடுகிறாள். ஆதிப்பெண்ணின் தன்மையைப் பெற்று விடுதலையோடும் நடன இயைபோடும் கட்டற்ற மண்வெளியில் திரிகிறாள். அங்கு அவளுக்குத் தன் கணவனைப் பற்றிய நினைப்பு, புறந்தள்ளத் தக்கதாகி விடுகிறது. அவள் தனக்கே தனக்கென்ற சுயத்தைக் கண்டறிந்து அதை முழுமையாக ஆசைதீர மாந்துபவளாகி விடுகிறாள். மநு, பெண்ணை, அவள் எந்நேரமும் நம்பிக்கை மோசம் இழைக்கும் சித்தமுடையவளாக இருப்பவள்; நம்பிக்கைக்கு உரியவள் அல்லள் என்கிறான். உண்மைதான். போட்டுக் கட்டிவைத்து, இல்லாத சட்டகங்களையெல்லாம் ஏற்றி, அவளைச் சமூகத்தின் எல்லாக் களத்திலும் இந்த ஆண்மையம் சிறைவைக்கும் என்றால் அவள் நம்பிக்கைக்கு உரிமையற்றுத்தான் போவாள்.

ஆண்? இந்தச் சமூக விதிமைகளால் பலன் பெறுபவன். அதனால் அதன் சட்டதிட்டங்களுக்கும் அது சமைத்துத் தந்திருக்கும் விதிமைகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டவன். அதனால் ஒருவகையில் சுருங்கிய ஆளுமை கொண்டவன். அதனால்தான் பொன்னாள், ஊரார் தன்னைக் குத்திப் பேசும்போது பொங்கிச் சீறுகிறாள். காளி பெரிதும் அமைதி காக்கிறான்; தனிமையில் குமைகிறான்.

குழந்தையற்ற பொன்னாளின் அழுகை, அரற்றுகை; காளியிள் தனிமை, பேச்சற்ற அமைதி என்னும் எதிர்வு பெண்ணின் அக விரிவையும் ஆணின் அகச் சுருக்கத்தையும் காட்டுகின்றன.

அவன் உருவாக்கிய தொண்டுப்பட்டியும் அதில் ஆடுகளும் அவன் புழங்கும் இரவுக் காலமும் அவனுடைய சுருங்கிய சமூகத்தைக் குறியீடுகளாக்குகின்றன. திருவிழாச் சடங்கில் சாமி கொடுக்கும் குழந்தையை அந்த ஆண் மனம் ஏற்கத் தயாரில்லை. அந்தத் திருவிழாவில் தீண்டாச்சாதி ஆண்களும் வருவார்கள் என்று அவன் தவிக்கிறான் (தீண்டாச்சாதி என்பது மட்டுமா தவிப்புக்குக் காரணம்?).

சாதியால், சுருங்கிய அகத்தால் இறுகிப்போன ஆண் சமுதாயத்திள் வித்து தன் சொத்து, உடைமை தன் கைதழுவிப் போகிறது என்று குமைகிறது. அந்த ஆணின் சுருங்கிய அகத்தைப் புரிந்துவைத்திருக்கும் சமூகம், விதிமீறல் நெகிழ்வுகளின் வழியாக அவனுக்குடையவள் தன் குடும்பத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் சூழலை, அந்த ஆண் அறிந்து கொள்ளாதபடி மறைக்கப் பார்க்கிறது.

பல நாள்களாக உள்ளத்தில் பூட்டிக்கிடந்த, சாமியிடம் பிள்ளை வரம் பெறும் ஆசையை, காளியின் அம்மா, காளியிடம், கள்ளைக் குடித்தபின்பு கிடைத்த போதையில்தான் தெரிவிக்க முடிகிறது. அவன் நொறுங்கிப் போகிறான். இந்த, ‘சாமி கொடுக்கும் பிள்ளை’ என்பதைப் பற்றிப் பொன்னாளுக்கும் காளிக்கும் இடையே நிகழும் மன அதிர்வுகளை மிகத்தேர்ந்த நுண்ணுளவியல் திறத்தோடு பெருமாள் முருகன் பின்னியுள்ளார். அத்தன்மை படைப்பை வாசிப்பதில் மிகுந்த விறுவிறுப்பைக் கொண்டு வருகிறது. வாசிப்பவரின் உளவியல் சார்ந்து பல்வகை அதிர்வுகளை உண்டாக்கிவிடும் தன்மையையும் பெறுகிறது.

அவ்வகையில் காளியண்ணன் என்னும் ஆணின்இருப்பு விரிந்தநிலையில் தொடங்கிப் படிப்படியாகக் குறுகிக்கொண்டே சென்று கடைசியில் புள்ளியாகி மறைகிறது. பெண்ணின் இருப்போ புள்ளியில் தொடங்கிப் படிப்படியாக விரிந்து எல்லையற்றதாகிறது. திருமணத்துக்கு முன்பான காளியின் வாழ்வு பற்றிய குறிப்புகள், தன் மச்சான் முத்துவுடன் மது வாழ்வு பற்றிய குறிப்புகள் என்பதாகிய தன் காலங்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து, அவன் தொண்டுப்பட்டியில் கிடந்து தொண்டுப்பட்டியில் முடிகிறான்.

எப்பொழுதுமே வெடித்துச் சிதறிவிடத் தயாராக இருக்கும் அவள் தன் எல்லையற்ற வெளியை ஒரு புள்ளியாகத் தன்னுள் புதைத்திருந்து வாய்ப்புக் கிடைக்கும்போது அவ்வெளியை விரித்து அதனுள் கலந்து விடுகிறாள். என்னதான் ஒரு பெண்ணுக்கான அகவெளி திறந்துவிடப்பட்டாலும், அந்த விடுதலை வாழ்வு பெண்ணுக்கு மிகக்குறுகிய காலம்தான்; அந்த விடுதலை தற்காலிகமானதுதான்.

சமூகத் தேவைக்கான விதி நெகிழ்வு என்பது பெண்ணுக்குரிய விடுதலையை நோக்கமாகக் கொண்டதன்று. ஆணுக்கான சமூக நிறுவனத்தைக் காப்பதற்குத்தான்.

பதினான்காம் நாள் திருவிழாவே ஒரு நிலையில் ஆணின் மீறிய காமத்திற்குத் தீனி போடும் நிகழ்வுதான். அங்குப் பயன்பெறுபவன் ஆண்தான். அதனால்தான் இந்தமுறை மூன்று என்றோ நான்கு என்றோ ஆண்கள் ஒருவருக்கொருவர் வெற்றிக்கதை பேசிக் குனுகிச் சிரித்துக் கொள்கிறார்கள்.

அன்றியும் ‘சாமி வரம்’ பெறும் பெண், சமூகம் ஏற்றுக்கொண்ட ஒரு நெகிழ்வின்படி பிள்ளை பெற்றுத் திரும்பித் தன் குடும்பக் கடமையை நிறைவேற்றி, சொத்துக்கான வாரிசைத் தந்துவிடுகிறாள் என்றும் இன்னொரு வகையான வாசிப்பை இங்கு நிகழ்த்த இடமிருப்பதாகப் படலாம்.

சமுதாயக் கட்டமைப்பே ஆண்வயமான உலகில், இப்படிக் குறிப்பிட்டுப் பேசப் புதிதாக ஒன்றுமில்லை. அதுதான் உண்மையும் கூட. நாவல் கவனப்படுத்துவது இந்தக் கூறையன்று. திருவிழாக்களில் சாமியாடும் பெண்களின் உக்கிரமோ, பேய் பிடித்தாடும் பெண்களின் கட்டுகளை மீறிய உடலியக்கமோ போல, பெண்ணின் இருப்பு, ஆண் உலகம் தனக்கெனச் செய்துகொள்ளும் நெகிழ்வை எவ்வாறு வகையாகத் தனக்கான விடுலையின் வெளியாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான். இங்குக் கூடுதலாகப் பெண்ணின் காமவெளி திறந்துவிடப்படுகிறது. காமத்தை முன்னிறுத்துகிற கட்டுப்பாடுகள்தாம் பெண்ணைப் பெரிதும் ஒடுக்குகின்றன.

மிக நுண்ணிய மனப்பதற்றங்களையும் காமம் சார்ந்த மதிப்பீடுகள்தாம் பெண்ணின் இருப்புக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தக் காமம்சார் கட்டுப்பாட்டு நெகிழ்வில், தெய்வத்தை முன்னிறுத்துவது பெண்ணின் அகவாசல் திறப்பதற்கான மிக நுணுக்கமான இசைவாகப் பெண்ணை இணங்கச்செய்கிறது.

தெய்வ முன்னிலையில் பெண்ணின் புறவாசல்கள் அடைபடுகின்றன. அந்த அகவெடிப்பில் பெண்ணின் பெருவெளி எப்படித் தன்னைச் சமைத்துக்கொள்ளும் என்ற சமூக, தனிமனித உளவியல் தேட்டத்தின் ஒரு சாத்தியப்பாட்டைத்தான் நாவல் கவனப்படுத்துகிறது. இந்தச் சாத்தியப்பாடு நாவலில் விரிவுறுவது எல்லோருக்குள்ளும் ஒடுங்கிக்கிடக்கும் ஒரு பெண்ணுலகைத் திறந்துவிடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். படைப்பாளி, வாசகர் என்று யாராக இருந்தால் என்ன? ஓர் ஆணுக்குள்ளும் இருக்கும் பெண்ணை இனங்காணவும் இந்தச் சாத்தியப்பாடு உதவிசெய்துவிடுகிறது.

அதனால் நாவலின் குறிப்பிட்ட இந்தப் பகுதியை வாசித்து வரும்போது, நாவலின் மற்ற பகுதிகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மறைந்துபோகின்றன.

பொன்னாள் தனக்கான ஆணைத் தேடிக் காணும் இவ்விடத்தில் வாசிப்பில் ஒருவகைக் குவிநிலையும் மனவோட்டங்களில் இதுவரை நேர்ந்திராத அதிர்வுகளும் உண்டாகின்றன. காளியும் பொன்னாளும் இல்லற சுகத்தில், காமத் துய்ப்பில் நிறைவு கண்டவர்களே! குழந்தை இல்லை என்பதைத் தவிர அவர்களின் அணுக்கத்தில் எந்தக் குறையும் இல்லை.

அந்த நினைப்பின் வலியைக்கூடக் காமத் துய்ப்புத்தான் போக்கி வந்திருக்கிறது என்பதெல்லாம் படைப்பாளி உரைப்பவையே தவிர உண்மை அப்படி இல்லை. பனுவலுக்குள் ஊடாடும் மறுபனுவலைக் காணவேண்டும். ஒருவனிடம் துய்த்துத் தீராப் பெண்ணின் காமவேட்கை வெளிப்பாடே பொன்னாளுடையது என்று வாசிப்பதற்கு இடமிருப்பதாகப் படலாம். ஆனால் இதுவும் உண்மையன்று.

இதுதான் பெண்ணின் அகவெளி திறப்பதற்கான காரணம் என்றால், திருவிழாவில் பொன்னாள் தான் சந்திக்க முதல் ஆடவன் உடனேயே புணர்ந்திருக்கலாம். அல்லது தனக்குப் பிடித்த மூன்று நான்கு பேருடனாவது கூடித் தீர்த்திருக்கலாம். பதினான்காம் நாளில் அவள் புதியவளாவது காமம் குறித்து மட்டுமில்லை. அவள் ஒரு சிறுமியைப் போல மாறிப்போகிறாள். திருவிழாவில் அவள் காணும் புதிய வெளி, அவள் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் பிரபஞ்ச வெளியின் ஒரு மாதிரி வடிவம்.

அதில் காமம் ஒரு சிறு கூறு. அல்லது குறிக்கத்தக்க மூலகங்களுள் ஒன்று. பெண்ணின் விடுதலை உணர்வு அந்த வெளியின் ஒவ்வோர் அசைவையும் தனக்குள்ளாக அங்குலம் அங்குலமாக அணுகுகிறது; ஏற்கிறது. தன் காமத்துக்குரியவனை அந்த ஏற்பின் தன்மையில், ஒரு தோழனாகத் தெரிவுசெய்கிறது.

ஆக, பெண்ணின் மடைதிறப்பு என்பது ஆணுடனான காம போகத்தோடு மட்டும் தொடர்புடையதில்லை என்பதைப் படைப்பு மிகநுட்பமாகப் பதிவுசெய்கிறது.

இவ்வகைகளில் எல்லாம் நுட்பநுட்பமாய்க் கிளைபிரிந்து செல்லக்கூடிய வாசிப்புகளை உண்டாக்குகிற படைப்பாக ‘மாதொருபாகன்’ அமைகிறது.

நாவலாசிரியர் பெருமாள் முருகன், தாம் ஆய்வில்கண்ட சடங்கு சார்ந்த மிக இன்றியமையாத வழக்கு ஒன்றைப் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்று நாவலாகத் தருவதுடன் கொங்கு மண்ணின் கூறுகளை ஆய்ந்து ஆய்ந்து கலந்து தந்திருக்கிறார். இவ்விரண்டு வகையான நோக்கங்களும் சம அளவில் இடம்பெற்றுப் படைப்பு சிறந்தமைகிறது. நன்றி!

நன்றி:

ஆசிரியர்:இரா.கந்தசாமி

மூலம்: கோவை ‘இலக்கியச் சந்திப்பு’ 17ஆம் நிகழ்வில் 30.04.2012 அன்று வாசிக்கப்பட்டு, பறை-2015 தொகை நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை (2012-04-30)

ஆசிரியர் குறிப்பு: புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பார்த்தியார் தமிழியற் புலத்தில், 'தமிழ், கன்னட தலித் புனைகதைகள் - ஒப்பீடு' எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, சென்னையில் உள்ள சிந்திக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பணி.. விருப்பம் உள்ள ஆய்வுப் புலங்கள் படைப்பிலக்கியம், ஒப்பிலக்கியம், தலித்தியம், பெண்ணியம், உளப்பகுப்பாய்வு, நவீனக் கோட்பாட்டு நோக்குகளில்

எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் மாதொருபாகன் நாவல் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், சமூக-அரசியல் எதிர்வினைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை இங்குப் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

குழந்தையின்மை, பாலினக் கட்டுப்பாடுகள் மற்றும் உறவியல் அழுத்தங்களை மையமாக்கி 'மாதொருபாகன்' நாவலின் புதிய கோணங்களை ஆராய்கிறார்.

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்தேதி: 2026-06-19மூலம்: உங்கள் நூலகம், பிப்ரவரி 2015 (2015-02-01)
பெருமாள்முருகனின் மாதொருபாகன்

குழந்தையின்மை, பாலினக் கட்டுப்பாடுகள் மற்றும் உறவியல் அழுத்தங்களை மையமாக்கி 'மாதொருபாகன்' நாவலின் புதிய கோணங்களை ஆராய்கிறார்.

ஆசிரியர்: சுரேஷ் கண்ணன்தேதி: 2026-06-12மூலம்: pitchaipathiram.blogspot.in/ஆகஸ்ட் 31, 2014 (2014-08-31)
மாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு

குழந்தையின்மை, பாலினக் கட்டுப்பாடுகள் மற்றும் உறவியல் அழுத்தங்களை மையமாக்கி 'மாதொருபாகன்' நாவலின் புதிய கோணங்களை ஆராய்கிறார்.

ஆசிரியர்: முனைவர் பா. இரவிக்குமார்தேதி: 2026-05-08மூலம்: அண்மைகால நாவல்கள் 1990--2010 (சோகா இகெதா கல்லூரி வெளியீடு) நூலில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது (2010-04-30)
‘மாதொரு பாகன்’ நாவலில் பண்பாட்டு நெருக்கடிகள்