முன்னுரை
தமிழ்ச் சமூகம் ஒரு நாவலை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கான முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. நாவலின் வாசகர்கள் யார்? ஒரு நாவல் வெளிவந்தவுடன் அதற்கான எதிர்வினைகள் என்ன? என்பது குறித்த ஆய்வுகள் வெளிவந்தால்தான், ஒரு நாவல் வாசகர்களால் எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும். தமிழில் இன்றும் மிகுதியாக நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களில் சில குறிப்பிட்ட நாவல்களுக்கு மதிப்புரைகள் அல்லது அறிமுகவுரைகள் எழுதப்படுவதுடன், மேற்கொண்டு அவற்றைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நாவல் திறனாய்வைப் பொருத்தவரை மற்றொரு விடயத்தையும் சுட்ட வேண்டும். நாவல் என்பது வாழ்க்கையை விசாரணை செய்வது; சமூகத்தின் அக வாழ்க்கை மற்றும் புற வாழ்க்கையை விரிவாகப் பேசுவது; வாசகனுக்குள் அவன் அறியாத உலகத்தைத் திறம்படச் சித்திரிப்பது என்பனவற்றை உணராமல், கோட்பாடுகளின் துணைகொண்டே இன்று இலக்கியங்கள் அணுகப்படுகின்றன. ஓர் இலக்கியத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள கண்டிப்பாகக் கோட்பாடுகள் தேவை. ஆனால், கோட்பாடுகள் மட்டுமே ஒரு நாவலை முழுவதுமாக மதிப்பிட்டுவிட இயலாது. இதனை மனத்தில் கொண்டே பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மாதொரு பாகன்: அறிமுகம்
எண்பதுகளில் இலக்கியத் துறைக்குள் தன் செயல்பாடுகளைத் தொடங்கிய பெருமாள் முருகனின் இலக்கிய வாழ்வில், ‘மாதொரு பாகன்’ ஒரு சிகர சாதனை எனலாம். ஏறுவெயில், நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் முதலிய நாவல்களைப் பெருமாள் முருகன் ஏற்கனவே படைத்திருந்தாலும், இலக்கியவுலகில் இன்று பெரிதும் பேசப்படும் நாவலாக ‘மாதொரு பாகனே’ திகழ்கிறது. ‘மன ஓசையில்’ கவிதைகளையும், திறனாய்வுகளையும் எழுதிய பெருமாள் முருகன், கடந்த இருபது ஆண்டுகளில் கவிஞராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக, தொகுப்பாசிரியராக, பேராசிரியராக, பன்முக ஆளுமையுடன் விளங்கி வருகிறார். அகராதி, மற்றும் பதிப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும், படைப்பிலக்கியவாதியாகத் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்கிற வியக்கத்தக்க ஆளுமையாக விளங்கி வருகிறார். ‘மாதொரு பாகன்’ என்னும் நாவல், திருச்செங்கோடு என்னும் பகுதியில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் பதிவு செய்துள்ளது. திருச்செங்கோட்டிலுள்ள ‘மாதொருபாகன்’ என்னும் அர்த்தநாரீசுவர வடிவக் கடவுளைச் சார்ந்து நிலவும் நம்பிக்கைகளையும், பண்பாட்டுப் பின்னணிகளையும் மிக அற்புதமாகப் படைத்துள்ளார் பெருமாள் முருகன். விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சில மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்தும் அதேசமயத்தில், பாலியல் சார்ந்த சமகால மதிப்பீடுகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார் பெருமாள் முருகன். கதைமாந்தர்களின் வாழ்வியல் அனுபவங்களை உயிர்ப்புடன் படைத்துள்ள காரணத்தால் இந்நாவல், யதார்த்த நாவல்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. குடும்பம் என்கிற அமைப்பு இறுக்கமானதா? நெகிழ்வானதா? ஆண் - பெண் உறவு (இந்நாவலில் கணவன் - மனைவி) இயல்பானதா? புனைவுகள் சார்ந்ததா? அன்பு, காதல் என்று சொல்லப்படுவதெல்லாம் ஆதிக்கம் மற்றும் அதிகாரங்களோடு தொடர்புடையதா? இயற்கை சார்ந்ததா? இக்கேள்விகளை நேரடியாக எழுப்பாமல் ஓர் அழகான கதை மற்றும் கதைமாந்தர்களின் ஊடாக எழுப்பிக் கொண்டு, அவற்றிற்கு விடை காண முற்பட்டுள்ளார் பெருமாள் முருகன். காளி - பொன்னா ஆகிய இருகதைமாந்தர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘மாதொரு பாகன்’ கதை உடலாலும் உள்ளத்தாலும் நெருக்கமாக வாழும் இத்தம்பதியர்க்குக் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக, உறவினர்களாலும் நண்பர்களாலும் கேலிப்பேச்சுகளுக்கு உள்ளாவதுடன் இருவரும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகிறார்கள். சிறுதெய்வமான பாவாத்தாவை வேண்டியும், பாண்டீசுவரர் கோயிலை ஒட்டியுள்ள வறடிக்கல்லைச் சுற்றியும்கூட பொன்னாத்தாவிற்குக் குழந்தை பிறக்கவில்லை. திருச்செங்கோடு பகுதியில் நடைபெறும் பதினான்காம் நாள் திருவிழாவில் குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்கள், தாங்கள் விரும்பும் அல்லது தேர்ந்தெடுக்கும் ஆடவனுடன் கூடலாம். அவ்வாறு முகம் தெரியாத ஆடவனுடன் கூடும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைச் ‘சாமி குடுத்த பிள்ளை’ என்று அந்தப் பகுதியில் அழைப்பார்கள் என்ற செய்தியைத் தன் முன்னுரையில் பதிவு செய்துள்ளார் பெருமாள் முருகன். (மாதொருபாகன், ப. 10) பொன்னாவின் சகோதரன் முத்து, பொன்னாவின் தாய், காளியின் தாய் உட்படப் பலரும் பொன்னாவைப் பதினான்காம் நாள் திருவிழாவிற்கு அனுப்புவதென முடிவு செய்தாலும் பொன்னாவை அனுப்புவதற்கு உடன்பட மறுக்கிறான் காளி. காளியின் பால்ய நண்பனாகவும், பொன்னாவின் சகோதரனாகவும் விளங்கும் முத்து, பதினான்காம் நாள் திருவிழாவிற்குப் பொன்னாவை அனுப்ப காளி சம்மதித்துவிட்டான் என்று பொன்னாவை நம்ப வைக்கிறான். இதை உண்மையென நம்பும் பொன்னா, குழந்தை வரத்திற்காகத் திருவிழாவிற்குச் செல்ல உடன்படுகிறாள். திருவிழாவில் தனக்கான ஆடவனை, சாமியைத் தேர்ந்தெடுக்கிறாள். இதை அறிந்த காளி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று கருதி, ‘நீ தவிச்சுக் கெடக்கோனும்டி. ஏமாத்திட்டியேடி தேவிடியா முண்ட’ என்று ஏசுகிறான். கீழே சாய்ந்தவனின் முதுகில் கயிறு அழுத்துவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.
யதார்த்தவாதமும் மாதொரு பாகனும்
பெருமாள் முருகனின் ஏறுவெயில், கூளமாதாரி, கங்கணம் பேன்ற நாவல்களைப் போலவே மாதொரு பாகனும் ஓர் யதார்த்தவாத நாவலேயாகும். திருச்செங்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மிகத் துல்லியமாகச் சித்திரித்துள்ளார் பெருமாள் முருகன். காடுகளும், மலைகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் பெருமாள் முருகனின் எழுத்தில் அற்புதமான காட்சிகளாக விரிகின்றன. இந்த நாவலைப் பல கோணங்களில் ஒரு வாசகனால் வாசிக்கவியலும். இனவரைவியலுக்கான கூறுகள் இந்நாவலில் மிகுதி. அப்பகுதியிலுள்ள மக்கள் வனப்பாவாத்தாவிற்கு எவ்வாறு பூசை செய்கிறார்கள் என்கிற விவரிப்பு ஓர் உதாரணம். உடல் முழுக்கத் தூவப்பட்ட சிவப்பில் ஆக்ரோஷம் கொண்ட பாவாத்தாவைச் சாராயமும், கோழியின் ரத்தமும் கொண்டு வழிபடும் வழக்கத்தை நாவலில் மிக இயல்பாகச் சித்திரித்துள்ளார் பெருமாள் முருகன். சமூக வரலாறு, புவியியல், இனவரைவியல் முதலியவற்றின் சங்கமம் இந்த நாவல். ஆனால், ஒரு நாவல் என்பது வெறும் காட்சி விவரணைகளோ துல்லியமான சித்திரிப்புகளோ மட்டுமன்று; ரத்தமும் சதையுமான கதைமாந்தர்களைப் படைத்திருப்பதுதான் இந்த நாவலின் வெற்றிக்குக் காரணம். பெருமாள் முருகனின் துல்லியமான சித்திரிப்பிற்கும் பாத்திர வார்ப்புக்கும் ஓர் உதாரணத்தைச் சுட்டலாம். கோழிக்குஞ்சுகளைக் காளி எவ்வாறு கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான் என்பதனைப் பின்வருமாறு பெருமாள் முருகன் வருணித்திருப்பார். “அடர்ந்திருக்கும் பனைகளில்தான் கரிக்குருவி கூடு கட்டும். அது கட்டத் தொடங்குவதிலிருந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வளர்க்கும் வரைக்கும் அந்தப் பக்கத்தில் வேறு எந்தப் பறவையும் வரமுடியாது. கரிக்குருவிகள் ஆணும் பெண்ணும் மாற்றிக் காவல் இருக்கும். ஏதாவது பறவைகள் வந்தால் கொத்தி விரட்டிவிடும். கைப்பிடிக்குள் அடங்கிவிடுவது பாலக் கரிக்குருவியின் உருவம். சிறியதுதான். வால் நீண்டு இரட்டையாகப் பிரிந்திருக்கும். பெருங்கழுகையே விசையோடு கொத்தி விரட்டி அடைத்துவிடும். கரிக்குருவி கூடுகட்டும் தருணத்தில் கோழிக்குஞ்சுகளை இறக்கி விட்டுவிட்டால் ஒன்றும் பிரச்சனையே இல்லை. குஞ்சுக்குக் காவலாக கரிக்குருவி இருக்கும். கரிக்குருவியின் காவலைக் காளி பயன்படுத்திக் கொண்டு கோழிக்குஞ்சுகளை வளர்த்துவிடுவான்ஞ்” (மாதொரு பாகன், ப. 106) இத்தகைய சித்திரிப்புகள் பெருமாள் முருகனுக்குக் கை வந்த கலை. அடிப்படையில், பெருமாள் முருகன் யதார்த்தவாதத்தை நம்பும் எழுத்தாளர். “கோழிக்குஞ்சயெல்லாம் கருத்தா வளக்கற உங்கையில் ஒரு கொழந்தயக் குடுக்க முடியலயே” என்று ஒப்பாரி வைக்கும் பொன்னாவை அடுத்தப் பத்தியிலேயே சித்திரித்துவிடுகிறார் பெருமாள் முருகன். எவ்வளவுதான் விவரணைகள் இருந்தாலும் கதைமாந்தர்களின் நுட்பமான உணர்வுகளை விவரிப்பதிலும் குழந்தை இல்லத் தம்பதியர்களின் மன உளைச்சல்களைச் சித்திரிப்பதிலும் இந்நாவல் வெற்றியைப் பெற்றுள்ளது. பொன்னா மற்றும் காளியின் மனப்போராட்டங்கள் இந்நாவலில் வாசகர்களை எளிதாக ஈர்த்துவிடுகின்றன.
‘மாதொரு பாகன்’ நாவலில் பண்பாட்டு நெருக்கடி
சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும் நவீன யுகத்தில் இத்தகைய கதையப் பெருமாள் முருகன் எழுதுவதற்குக் காரணம் என்ன? வேறு சொற்களில் கூறுவதென்றால் நிலமானியச் சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை இன்று முதலாளித்துவச் சமூகத்தில் பெருமாள் முருகன் விவாதிப்பதற்கு என்ன காரணம்? பெண்கள் குறித்த பண்பாட்டு விழுமியங்கள் அன்றும் இன்றும் ஒரேநிலையில்தான் உள்ளன. எவ்வளவுதான் பெண் விடுதலையைப் பற்றிப் பேசினாலும், பெண் என்பவள் ஆணுக்கு உடைமைப் பொருளாகத்தான் இருக்கிறாள் என்பதைக் ‘காளி’ என்கிற கதைமாந்தரின் மூலம் உணர்த்தியிருக்கிறார் பெருமாள் முருகன். குழந்தைக்காக ‘பொன்னா’, பதினான்காம் நாள் தேர்த்திருவிழாவிற்குச் செல்லத் தயாராக இருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது காளியின் மனம். “மாமா, கொழந்தைக்காவ நீ சொல்றியோனு நெனச்சன் மாமா. உனக்குப் பிரியம் இல்லாத எதையாச்சும் நான் செய்வனா?” (மாதொரு பாகன், ப. 95) என்று பொன்னா சமாதானம் செய்யும் இடம் நாவலில் முக்கியமானது. பொன்னாவும் காளியும் மனதளவிலும், உடலளவிலும் முதன்முறையாக விலகும் இடம் இது. “அன்றைக்குப் போல மோசமான உறவு என்றும் நடந்தில்லை” (மாதொரு பாகன், ப. 95) என்ற வரிகள், உளவியல்ரீதியாக காளியும் பொன்னாவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதை உணர்த்தும் இன்றியமையாத வரிகளாகும். குடும்ப அமைப்பும், திருமண உறவும் போலியானது; அல்லது புனைவுகள் சார்ந்தது என்பதை உணர்த்த நல்லுப்பையன் சித்தப்பா என்கிற கதைமாந்தரையும் உருவாக்கியுள்ளார் பெருமாள் முருகன். ஆனால், வாசகர்களிடம் எந்தவொரு கருத்தையும் பெருமாள் முருகன் வலிந்து திணிக்கவில்லை. இன்றைய வாசகர்களிடம் பெருமாள் முருகன் மறைமுகமாக முன்வைக்கும் கேள்வி ஒன்றுதான். காளியின் இடத்தில் வாசகர்களாகிய நீங்கள் இருந்தால் எந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பீர்கள்? “நீ சொல்லு. உனக்குப் பிள்ள இல்லாத இருந்தா உன் பொண்டாட்டியக் கண்டவனோட அனுப்புவியா?” (மாதொரு பாகன், ப. 117) என்று நாவலில் காளி, முத்துவிடம் கேட்கும் கேள்வி பண்பாட்டு நெருக்கடியை உருவாக்கும் கேள்வி. ஒருவகையில் வாசகர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில் அத்தனை எளிமையானது அல்ல. இந்திய விடுதலைக்கு முன்பு நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஒரு கதையில், இன்றைய சமூக விழுமியங்கள் என்ன? எந்த வகையில் இந்த நாவல் இன்றைய சமூகத்தை, இன்றைய வாசகர்களைப் பாதிக்கிறது? என்ற கேள்விக்கான விடை நாவலின் இறுதிப்பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளது. பதினான்காம் நாள் திருவிழாவில் தனித்து விடப்படுகிறாள் பொன்னா. அளவுகடந்த சுதந்திரத்தைத் தன் வாழ்நாளில் முதன்முறையாக அனுபவிக்கிறாள். தன்னைத் தேடும் ஆடவர்களை நிராகரிக்கும் அளவிற்குச் சுதந்திரம். இந்திய அல்லது தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெண்ணிற்கு இன்றுவரை இத்தகைய சுதந்திரம் இல்லை. மனதாலும் உடலாலும் தனக்குரிய ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாத நிலையில்தான் இன்றைய பெண்களின் நிலை உள்ளது. திருவிழாவில் ஒவ்வொரு ஆடவனையும் நிராகரிக்கும் இடம் இந்நாவலில் முக்கியமானது. பெண்ணியத்தை நேரடியாகப் பிரச்சாரம் செய்யாமல், கதைமாந்தரின் பாத்திரவார்ப்பின் மூலமாகப் பெருமாள் முருகன் பேசும் இடம் இது. அந்த வகையில், யதார்த்தவாதம் ஒருவகையில் வெற்றி பெறும் இடம் என்று நாவலின் இப்பகுதிகளைச் சொல்லலாம். நாவலின் இறுதியில் அதே யதார்த்தவாதத் தன்மையுடன் காளியின் மன உணர்வுகளைச் சித்திரித்துள்ளார் பெருமாள் முருகன். கோழிக்குஞ்சுகளைக் கூட பிரியமாக வளர்க்கும் காளி, கதையின் இறுதியில், தான் பிரியமாக வளர்க்கும் நாயை ஆத்திரத்தில் எட்டி உதைக்கிறான். ‘தேவிடியா முண்ட. ஏமாத்திட்டியேடி’ என்று காதல் மனைவியை ஏசுகிறான். இந்த இடத்தில், இதே கதையை ஒரு பெண் எழுதியிருந்தால் இத்தகைய முடிவு சாத்தியமாகியிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. திருவிழாவில் தனக்குரிய இணையைத் தேடும் இடத்திலேயே கதை முடிந்திருக்கக்கூடும். ஆண் எழுத்தென்றும், பெண் எழுத்தென்றும் பேசும் கோட்பாடு சார்ந்த திறனாய்வு இத்தகைய சூழலில்தான் தேவையாகிறது. கோட்பாடுகள், நாவலை முழுவதுமாகத் திறக்கும் திறவுகோல்கள் இல்லை. அதேநேரத்தில். இலக்கியத்தையும், வாழ்க்கையையும் மேலும் புரிந்துகொள்ள கோட்பாடுகள் தேவை என்பதையும் மறுக்க முடியாது.
நிறைவுரை
அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல்களுள் ‘மாதொரு பாகன்’ விமர்சகர்களால் மிகுதியாகப் பேசப்படும் நாவல். பாலியல் சார்ந்த பிரச்சினை, ஆண் - பெண் உறவில் சமூகத்தின் பாதிப்பு முதலியவற்றைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலத்திலும் பேசப்படும் நாவலாக ‘மாதொரு பாகன்’ திகழும். பல கோணங்களில் ஆராயப்பட ‘மாதொரு பாகன்’ நாவலில் நிறைய இடம் உண்டு. குறிப்பிட்ட சமூகத்தின் அகத்தையும் புறத்தையும் பேசும் முக்கியமான நாவல் இது. வாசகர்கள், ஒருவகையில் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகவும் இந்நாவல் திகழ்கிறது. ஆணாதிக்கத்தின் அடையாளமாகக் காளி; பெண் விடுதலையை எத்தனிக்கிற தேடலில் பொன்னா; குடும்ப அமைப்பையும், திருமண உறவையும் நிராகரிக்கும் நல்லுப்பையன் சித்தப்பா; குடும்ப அமைப்பு இயல்பானது என்று நம்பும் முத்து போன்ற பிற கதைமாந்தர்கள். எத்தகைய பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கப் போகிறோம் என்பதற்கான பதில் நாவலில் இல்லை. நாவலுக்கு வெளியே சமூக வாழ்க்கையில் இருக்கிறது. அத்தகைய வாழ்க்கையைத் தேடுகின்ற சூழலை உருவாக்கியிருக்கும் வகையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல்களுள் ‘மாதொரு பாகன்’ குறிப்பிடத்தக்கது எனலாம். ### பயன்பட்ட நூல்கள்
- 1. பெருமாள் முருகன், மாதொரு பாகன்.
- 2. க.பஞ்சாங்கம் , பெண் மொழி புனைவு.
- 3. இரா.பிரேமா, , பெண்ணியம் : அணுகுமுறைகள்.
- 4. தொ.ஆ.காவ்யா சண்முகசுந்தரம் , பெண்ணியமும் பிரதிகளும்.
